
கொளத்தூரில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டார் வி.எஸ்.பாபு.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சுவாசப் பிரச்னை காரணமாக அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் பாபு சேர்க்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் இன்று பிற்பகலில் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலில், நெடுங்காலம் தி.மு.க.வில் இருந்துவந்த பாபு, புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 2006ஆம் ஆண்டு வென்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வுக்குச் சென்றவர், சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, கடந்த தேர்தலில் த.வெ.க.வில் சேர்ந்து ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டதால், தமிழகம் முழுவதும் கவனம் பெற்றார்.
அறிவாலயத்தில் ஒரு கையில் மு.க.ஸ்டாலின் செய்துகாட்டிய கதம்கதம் சைகையை, தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாபு இரண்டு கைகளையும் வைத்து பதிலடி கொடுத்த காட்சி அதிகமாகப் பரவலானது.
அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாபுவுக்கு, அது கிடைக்காமல் போனது அவரின் ஆதரவாளர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக, பாபு தி.மு.க.வில் இருந்தபோது 2006 வாக்கில் சென்னை மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றபோது, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தேவியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் குற்றம்சாட்டப்பட்டார். பிறகு, இரு கட்சிகளும் கூட்டணி வைத்து ஒரே அணியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் நிகழ்ந்தது.