ஒட்டுமொத்த ஊடகமும் திருமாவுக்காக வெய்ட்டிங்... ஜாம் ஆன விசிக அலுவலகம்!

ஒட்டுமொத்த ஊடகமும் திருமாவுக்காக வெய்ட்டிங்... ஜாம் ஆன விசிக அலுவலகம்!
Published on

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல… உலக சினிமாவே கூட கண்டிராத பல ட்விஸ்ட்களோடு தமிழக அரசியல் அதிர்ந்துகொண்டுள்ளது. முக்கியமாக நேற்றைய திருப்பங்கள் அதுவும் விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த திருப்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுகவிடம் இணக்கமும் சில சமயம் பிணக்கமும் கொண்டிருந்த திருமா இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நல்ல புரிதலோடேதான் இருந்தார். அது நேற்று மாலைவரைதான்.

முந்தைய தினம் திமுகவும் அதிமுகவும் ஒரு ஒப்பந்தத்துக்குள் வந்து எடப்பாடியை முதல்வராக்கும் தற்கொலை முடிவுக்கு வந்தபோது, அதுவரை திமுகவின் செயல்களுக்கு தலையாட்டி வந்த திருமா, கம்யூனிஸ்ட்களோடு கைகோர்த்து அறிவாலயத்தை விட்டு வெளியேறினார். எடப்பாடியை ஆதரிப்பதென்பது நேரடியாக பாஜகவை தமிழக அரியணையில் அமர்த்துவது என்பது அவர்களது தரப்பாக இருந்தது.

அம்முடிவில் இக்கூட்டணி உறுதியாய் இருந்த நிலையில் திமுக மெல்ல திருமாவுக்கு எ.வ. வேலு மூலமாக வலை விரித்தது. ‘சரி எடப்பாடியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் விடுங்கள் . உங்களையே முதல்வராக்குகுகிறோம். எங்கள் ஒரே நோக்கம் விஜய் முதல்வராகக்கூடாது என்பது மட்டுமே’ என்று திருமாவின் நாக்கில் கொம்புத்தேன் தடவப்பட்டது.

வெறுமனே இரண்டே சீட்டுகள் வைத்துக்கொண்டு நாம் எப்படி முதல்வராக முடியும். இவ்வளவு நாட்களும் நமக்கு இரட்டை இலக்க சீட்டுகள் தர மனமில்லாதவர்கள், இன்று இந்த அளவுக்கு இறங்கி வருகிறார்களே என்றெல்லாம் கூட யோசிக்காத மாலை 4 மணிக்குமேல் கம்யூனிஸ்ட் கூட்டணிகளிடமிருந்து மெல்ல நழுவ ஆரம்பித்தார்.

முன்னதாக விசிக, இரு கம்யூனிஸ்ட்கள் இணைந்தே ஊடகங்களை சந்திப்பதாக இருந்ததில் இருந்து திருமா திடீரென பின் வாங்க, சிபிஐ, சிபிஎம் மட்டும் ஊடகங்களை சந்தித்து விஜய் தங்கள் ஆதரவை தெரிவித்ததோடு, இன்னும் சில நிமிடங்களில் எங்களோடு சேர்ந்து விஜய்க்கு தனது ஆதரவைத் தெரிவிப்பார் என்கிற உத்தரவாதத்தையும் கொடுத்தனர்.

அப்போது எ.வ.வேலுவின் மூலமாக மீண்டும் அறிவாலயத்தின் கஸ்டடியில் சிக்கிய திருமாவுக்கு எடப்பாடி, ரஜினி உள்ளிட்ட சில பெரும் பெரும் தலைகள் திருமாவை ‘நீங்கதான் அடுத்த முதல்வர்’ என்று தொடர்ந்து உசுப்பேற்றிக்கொண்டேயிருந்தனர்.

நாக்கில் தடவப்பட்ட தேனை நன்கு ருசித்துக்கொண்டிருந்த திருமா நேற்று மாலையிலிருந்தே தோழர்கள் மற்றும் விஜய் கட்சியினரின் தொடர்பு எல்லைக்கு வெளியே போனார். அவர்கள் சார்பாக தேடி வந்த மத்தியஸ்தர்கள் ஒருவரைக் கூட அவர் சந்திக்க முன்வரவில்லை.

அப்பரபரப்பு இரவு முழுக்க நீண்டுகொண்டிருக்க, திருமாவுக்கு மிகவும் நெருக்கமான சிலர், ‘தலைவரே திமுகவும் எடப்பாடியும் தற்போது அவர்களது சுயநலத்துக்காக உங்களுக்குக் கொடுக்க வந்திருக்கும் முதல்வர் பதவியானது நடைமுறைக்கு மிக மிக எதிரானது. வெறும் இரு தொகுதிகளை கைவசம் வைத்துக்கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி முதல்வரானால் அது சில நாட்களுக்குக் கூட நீடிக்காது. இப்போதைக்கு மக்கள் முதல்வராக விஜய் வருவதையே விரும்புகிறார்கள் என்கிற நிதர்சனத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது பா.ஜ.க எதிர்ப்பு என்பது உண்மையானால் எடப்பாடியை நாம் நிச்சயம் நிராகரிக்கவேண்டும். நமது அரசியல் அதிகாரத்தை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்திக்கொள்ள விஜய்யை ஆதரித்து உங்களுக்கு துணை முதல்வர் பதவியும் நம் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும் பெற்றுக்கொண்டாலே நாம் இன்னும் வலுப்பெற்றுவிட முடியும் என்று நிலவரத்தை விளக்கவே சுய நினைவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்.

எதிர் திசையில் நேற்று தோழர்களின் அலுவலகங்களுக்கு வருகை தந்து அவர்களுக்கு மரியாதை செய்தது போலவே இன்று காலை விசிக அலுவலகத்துக்கு வருகை தந்து திருமாவிடம் விஜய் ஆதரவு கேட்கவிருப்பதாகவும் அத்தோடு திமுக, அதிமுகவின் சித்து விளையாட்டுகள் முடிவுக்கு வரக்கூடும் என்றும் செய்திகள். இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த ஊடகமும் அங்கே குவிந்து கிடந்து.. ப்ரஷரை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பொம்மலாட்டம் நடக்குது… ரொம்பக் கொடுமையாக இருக்குது.

logo
Andhimazhai
www.andhimazhai.com