
’ பசி, பட்டினி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். இளம் வயதில் எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில்தான் இருந்தது’ என்று விஜய் அடிக்கடி குறிப்பிடும் செய்தி அவர் முதல்வரான பின் பலத்த விவாதத்துக்கு ஆளாகியிருக்கிறது.
விஜய் சும்மா சிம்பதி கிரியேட் பண்ணுகிறார். அவர் பிறக்கும்போதே அவரது தந்தை எஸ்.ஏ.சி. பிரபல இயக்குநர் என்று பலரும் சொல்லிவரும் நிலையில், பிரபல முகநூல் பதிவர் கானா பிரபாவின் ஒரு முக்கிய பதிவு இது.
“Chai With Chithra வில் முன்னர் வந்திருந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டியை இன்று காலை இன்னொரு விஷயத்துக்காகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் சென்னை வந்து ராஜகுமாரி தியேட்டர் முன் ப்ளாட்பாரத்தில் படுத்து, ஒரே ஒரு வேளை இட்லி சாப்பிட்டு வாய்ப்புத் தேடியதாகவும், மறக்காமல் அன்னக்கிளி ஓடிய தியேட்டர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஷோபாவின் தந்தை நீலகண்டன் கொடுத்த நாடக வாய்ப்புகள் தான் அவரை முழுமையாகக் கலைத்துறையில் இயங்கத் தூண்டுகோலானது. நாடகச் சம்பளம் 20 ரூபா.
ஷோபாவோடு காதலும் கனிந்தது.
சந்திரசேகரின் முதல் படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978) இல் வெளியான போதும் அந்தப் படம் வந்த சுவடு இல்லாமல் போனது.
எஸ்.ஏ.சந்திரசேகர் உதவி இயக்குநராக இருந்த, எங்கள் தங்க ராஜா, உத்தமன், பட்டாக்கத்தி பைரவன் பட இயக்குநர் ராஜேந்திர பிரசாத் (தெலுங்கில் வெகு பிரபலம்) இன் செலவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில், கமலா அம்மாள் தாலி எடுத்துக் கொடுக்கத் திருமணம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சந்திரசேகர் கிறிஸ்தவர் என்பதால் அவர் தரப்பில் கடும் எதிர்ப்பு, அவரின் தந்தை திருமணத்துக்கே வரவில்லையாம்.
விஜய் பிறந்து (1974) கஷ்ட தருணத்தில் இருந்தது எல்லாம் மேற்கண்ட தரவுகளில் மெய்ப்பட்டிருக்கின்றன.
எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயிக்க ஆரம்பித்தது 1981 இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறையில் இருந்து.
எனவே அவரின் கருத்துரைக்கு எதிராகக் களமாடும் இணைய விமர்சகர்கள் அமைதி காக்கலாம்.’’