"பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அலர்ட்டாக இருக்கிறோம்." என்று துணை முதலமைச்சர் உதநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளிலும், மழைநீர் தேங்கும் பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “மழை பாதிப்பு குறித்து சமூக ஊடகம் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைபேசி மூலமாக வந்த புகாரை அடுத்து, நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றேன். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அலர்ட்டாக இருக்கிறோம்” என்று கூறினார்.