உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை கொடிசியா மைதானத்தில் இருநாள்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய அவர் பேசியதாவது:
“தொழில்துறை மாநாடுகளால் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி மாநிலத்தின் ஒட்டுமொத்த துறையும் வளர்ச்சி அடைகிறது. வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் குடும்பங்கள் வளர்ச்சி அடைகிறது.
அமைதியான சட்டம் - ஒழுங்கு சிறப்பான மாநிலங்களுக்குதான் தொழில்துறையினர் வருவார்கள். தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனங்களை நடத்தலாம் என்பதால்தான் மாநாடு நடைபெறுகிறது.
அதிக வேலைவாய்ப்புகள், முதலீடுகளை ஈர்க்கக் கூடிய தொழில்துறையினரை கடந்த நான்கரை ஆண்டுகளில் ஈர்த்துள்ளோம். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முனைப்புடன் அரசு செயல்படுகிறது. இதற்காக சிறு, குறு தொழில்கள், புதிய புத்தாக்க தொழில்களும் பங்காற்றுகின்றன.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் புத்தொழில் சார்ந்த திட்டங்களின் விழிப்புணர்வுகள் பரப்ப வேண்டும் என்பதே அரசின் இலக்கு. பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு அரசின் தொழில்முனைவோர் திட்டங்கள் சென்றடைய வேண்டும்.
உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. அதன் முக்கிய மைல்கல்லாக உலக புத்தொழில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முன்பைவிட 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,032 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 12,000 -ஐ கடந்துள்ளது. இதில், 50 சதவிகிதத்துக்கும் மேல் பெண்கள் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களாக உள்ளன.
சிறந்த புத்தொழொல் கொண்ட மாநிலங்களில் தரவரிசைப் பட்டியலில், 2018 இல் கடைசி இருந்த தமிழகம், 4 ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.” என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமான ‘ஜி.டி.நாயுடு’ மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக நீளமான இந்த மேம்பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.