
"தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்காவிட்டால் 51 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது" என இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய இணையமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டன.
அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக (அன்புமணி), தமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக், ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கொங்கு முன்னேற்ற கழகம் தங்கவேல், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி ஆகியோரும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
என்.டி.ஏ கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தேமுதிக உடன் அதிமுக பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, என்.டி. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்டுள்ளாராம்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே, "தமிழக சட்டசபை தேர்தலில், இந்திய குடியரசு கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது. ஏற்கெனவே, இந்தக் கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை ஏற்று குறைந்த அளவு தொகுதியாவது ஒதுக்க வேண்டும். தொகுதிகளே ஒதுக்காவிட்டால், தலித் வாக்குகள் அதிகம் உள்ள 51 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்.
இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தச் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது கரும்பு விவசாயி சின்னத்தில் உள்ள நிறத்தை நீலமாக மாற்ற உள்ளோம்.
தமிழகத்தில் பட்டியலின பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். விசிக தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி, தமமுக தலைவர் ஜான் பாண்டியன் என பல தலைவர்கள் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தனித்தனியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற அரசியல் கட்சிகள், இயக்கங்களை வழிநடத்திவரும் தலைவர்கள், ஒரே கூட்டமைப்பின் கீழ் இணைய வேண்டும். இந்தக் கூட்டமைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமை வகிக்க வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க முடியும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறுவது உறுதி. தவெக தலைவர் விஜய் என்டிஏ கூட்டணியில் இணைந்தால், மேலும் வலுவாக இருக்கும். இதனால், திமுக தோல்வியை உறுதி செய்ய முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.