மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 17ஆம் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்மை பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசுகையில், “தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, 16-வது சட்டமன்றப் பேரவையின் எட்டாவது கூட்டத்தொடரின் நிறைவு நாளில் நாம் இங்கே ஒன்று கூடியுள்ளோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஐந்து நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப் பெற்று, இந்த ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது சிறப்பான விவாதம், பதிலுரை வழங்கப் பெற்றுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் சிறப்பான அறிக்கையையும், பதிலுரையையும் வழங்கியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியை, அடுத்த இரண்டு மாதத்தில் மீண்டும் வந்து, நிச்சயம், இன்னும் கூடுதலாக, வேகமாகத் தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களைப் போலவே எனக்கும் இருக்கிறது.
தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கால நேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணையோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைப்பிடித்திருக்கிறேன். ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு – அந்த முடிவினால் விளையும் பயன்- பயன் பெற்றவர்களின் உயர்வு – உயர்வினால் உண்டாகும் வளம் – வளத்தினால் விளைந்திடும் இன்பம் – இன்பத்தால் கிடைத்திடும் நன்மை – இதுவே நாம் இப்போது காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த நன்மையே மக்களுக்கு நம்பிக்கையைத் தந்து, நாளைய ஆட்சியாளர்களாக எங்களைத் தொடரச் செய்யப் போகிறது.
இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளும் வல்லமையையும் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பைத் தந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
நூற்றாண்டைக் கடந்து பெருமையோடு இயங்கி வருகிறது இந்தப் பேரவை. ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில்கொண்டு, ஆளுநர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“குறைகளைச் சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்குச் சிறகுகளைத் தரக்கூடியவர்கள்” என எண்ணிச் செயலாற்றுபவன் நான். அரசுக்குத் தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்றைக்கு வரவில்லை. இருந்தாலும், அவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கெல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அன்போடும் பாசத்தோடும், என்றென்றும் என்னிடத்திலே உரிமையோடு அன்புகாட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, 16-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் என்ற முறையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்த அரசு சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைத்து வகைகளிலும் துணைநின்ற தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும், காவல் துறை அலுவலர்களுக்கும், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். ஒவ்வொரு துறையிலும் இருந்து வருகிற கோப்புகளை எனக்குச் சமர்ப்பித்து, அனுமதி பெற்று, அத்திட்டங்களைக் கண்காணிக்கும் என்னுடைய செயலாளர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 24-01-2026 அன்று இதே பேரவையில் நான் உரையாற்றும்போது குறிப்பிட்டதை இப்போது நான் நினைவுகூர்கிறேன்: “2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 6-வது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்குக் கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது” என்று நான் சொல்லியிருந்தேன்.
முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு; நமக்கு ஒத்துழைக்காத, ஓரவஞ்சனை செய்யக்கூடிய மத்திய அரசு இரண்டுக்கும் இடையில்தான் நாம் இருந்தோம். நமக்குப் பெரும் வெற்றியைத் தந்து பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த 5 ஆண்டுகளில் அடைந்திருக்கின்றோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை, இயற்றிய சட்டங்களை மக்களின் முன் வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.
திராவிட மாடல் அரசால், இந்த 5 ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்துச் சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லை! இல்லவே இல்லை! ஒட்டுமொத்த தமிழர்களும் என் கையோடு கைசேர்த்து, எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள். நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உழைத்த நான், லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். எவரேனும் விடுபட்டிருந்தால், அவர்களையும் இணைத்துக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
நன்றி! வணக்கம்!.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.