நாதக தலைவர் சீமானின் முயற்சிகள் வெற்றி பெறட்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்த நாதக தலைவர் சீமான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசி முடித்து கிளம்ப இருந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்திக்க வந்த போது, அவரை வரவேற்று கட்டித்தழுவினார். சீமானின் தோளில் கைபோட்டு நடந்துவந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ சீமானை புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டின் தன் மானத்துக்கும் வீரத்துக்கும் இளைஞர்களின் உள்ளங்களில் புயல் வீசி வருகிற சீமானும் நானும் ஒரே நேரத்தில் வந்தது மகிழ்ச்சியை தருகிறது. அவரது முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன்.
என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார். இனி எங்கள் பயணம் தொடரும்.” என்று வைகோ கூறினார். உடனே அவரின் கையை பிடித்து வணங்கினார் சீமான்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை எழுப்பிய கேள்விகளுக்கு சீமான் பதிலளித்தார்.
மதிமுகவினரும், நாதகவினரும் மோதி வந்த நிலையில் இருவரும் இணக்கமாக பேட்டி அளித்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.