சென்னையில் இவ்வளவு மழைக்கு என்ன காரணம்?

சென்னையில் இவ்வளவு மழைக்கு என்ன காரணம்?

சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை விடிய விடிய கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு மழை பெய்ததில்லை என்கின்றனர்.

நேற்று இரவு முதல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ மழையும், தரமணியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ, பூந்தமல்லியில் 7.4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், 19.17 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது. தென்சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை பெய்துள்ளது.

”பொதுவாக ஜுன் மாதத்தில் அதிக மழை பெய்வது கிடையாது. கடந்த 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஜூன் மாதத்தில் சுமார் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் 184 மி.மீ மழை பதிவானது. 1996ஆம் ஆண்டில் ஜூன் 14 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் 217,5 மி.மீ மழை பதிவானது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜூன் 24ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடுவதால், கேரளாவில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ” என்கிறார் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான்.

அதேபோல், கனமழை காரணமாக துபை, தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேவேளையில் கனமழையால் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும், தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com