திருப்பதிக்கு 44 லட்சம் கொடுத்தால் என்ன தப்பு...? டென்ஷன் ஆன அமைச்சர் கே.என்.நேரு!

அமைச்சர் கே.என். நேரு
அமைச்சர் கே.என். நேரு
Published on

“திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்துக்கு நான் 44 லட்சம் வழங்கியதில் என்ன தவறு உள்ளது?” என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மூன்று வேளையும் இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானச் சேவைக்கான ஒருநாள் முழுச் செலவு ரூ.44 லட்சம் ஆகும்.

அன்னதானம் கொடுக்க விரும்புபவர்கள் ரூ.44 லட்சத்தை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே கொடுக்க வேண்டும். அந்த நன்கொடையாளர் அன்னதானம் கொடுக்கும் நாளில் அவர் பெயர் கோயிலைச் சுற்றியுள்ள காட்சிப் பலகையில் காண்பிக்கப்படும். அந்த வகையில் திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு கடந்த 9ஆம் தேதி திருப்பதி திருமலை கோயிலில் அன்னதானம் வழங்கியுள்ளார்.

அன்னதானத்திற்காக அமைச்சர் கே.என்.நேரு ரூ.44 லட்சம் கொடுத்ததாக அவரது பெயர் திருப்பதி திருமலை அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் போர்டுகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

திராவிட கொள்கையையும், தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையையும் கொண்டிருக்கும் திமுகவின் மூத்த தலைவர் ஏழை, எளிய மக்களுக்கு பணத்தை கொடுக்காமல், உலகின் பணக்கார கோயிலுக்கு வாரி வழங்கியது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த நிலையில், கே.என்.நேரு இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 'திருப்பதி கோயில் அன்னதானத்துக்கு நீங்கள் 44 லட்சம் வழங்கியது குறித்து விமர்சனம் எழுந்துள்ளதே' என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதனால் டென்ஷன் ஆன கே.என்.நேரு, ''ஏன் நான் திருப்பதி கோயிலுக்கு பணம் கொடுக்கக் கூடாதா? விமர்சனம் செய்கிறவர்கள் செய்யட்டும். எங்களை யார் நல்லவன் என்று சொல்வார்கள்'' என்றார் கோபமாக.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com