
சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இதேப்போன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு நடிகர் விஜய்யின் தவெக கட்சி தீவிரமாகத் தயாராகி வருகிறது.
அதன்படி, கட்சியின் தேர்தல் சின்னத்தைப் பெறுவதற்காக, தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில், விசில், ஆட்டோரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. இதில் தவெகவின் முதன்மை விருப்பமாக 'விசில்' சின்னம் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் மீண்டும் டார்ச் லைட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக 'விசில்' சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'பிகில்', தெலுங்கில் 'விசில்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அவரது சமீபத்திய படமான 'தி கோட்' (The GOAT) படத்தில் இடம்பெற்ற 'சத்தம் பத்தாது விசில் போடு' என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் சின்னத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிக எளிதாகக் கொண்டு செல்ல முடியும் தவெக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.