தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநில காவல்படைத் தலைவர் பதவிக்கு முழு நேர ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயர்நிலைக் குழு கூட்டம் வரும் செப்டம்பர் 26 -ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணையம் நடத்த உள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு அண்மையில் அனுப்பி வைத்த உயரதிகாரிகளின் தகுதி முன்மொழிவுப் பட்டியல் மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பசீலனையில் தற்போது உள்ளது. இதில் இருந்து மூவர் கொண்ட பட்டியல் தேர்வு செய்யப்படும்.
இந்த தேர்வுக்குழுவில் யுபிஎஸ்சி தலைவர்,மத்திய உள்துறைச் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், மத்திய காவல் படைகளின் தலைவர்களில் ஒருவர் ஆகியோர் இடம்பெறுவர். தமிழக டிஜிபியும் இந்தக் குழுவில் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இம்முறை பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமனும் இந்த பதவிக்கு ஒரு போட்டியாளராக இருப்பதால் அவர் இடம்பெற மாட்டார்.
தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் சீனியாரிட்டி அடிப்படையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இதற்கு அடுத்த நிலையில் கே. வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் உள்ளனர். பிரமோத் குமார், அபய் குமார் சிங் ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவே. ஏனெனில், அவர்கள் இன்னும் 6 மாதத்துக்குள்ளாகவே ஓய்வு பெற உள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிரகாஷ் சிங் வழக்கு தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி தேர்வை விரைவாக நடத்தி முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கேட்டுக்கொண்டது.
யுபிஎஸ்சி தேர்வுக்குழு கூடி ஆலோசித்த பின்னர் தகுதிவாய்ந்த முதல் மூன்று ஐபிஎஸ் உயரதிகாரிகளை டிஜிபி ஆக நியமிக்க யுபிஎஸ்சி பரிந்துரைக்கும். அதில் இருந்து ஒருவரை மாநில முதல்வரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு நியமிக்கும் எனத் தெரிகிறது.
தமிழக காவல் துறை டிஜிபி பதவியில் இருந்து சங்கா் ஜிவால் கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றார். ஆனால், விதிகளின்படி அப்பதவிக்கு முழு நேர டிஜிபியை நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு சில சட்ட ரீதியிலான காரணங்களால் முன்கூட்டியே தொடங்காமல் தற்காலிக ஏற்பாடாக ஐபிஎஸ் உயரதிகாரி வெங்கடராமனை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக நியமித்துள்ளது.