
திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி நடிகை ரஞ்சனா நாச்சியார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியார் இருந்தார். விஜய் - சங்கீதா விவாகரத்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை கட்சி மற்றும் விஜய் மீது வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது தவெக-வில் இருந்து விலகி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியாரின் சிந்தனை, அண்ணாவின் வழிகாட்டுதல், கலைஞரின் பாரம்பரியம் இவை அனைத்தும் கலந்த கலவையாக திமுக இருப்பதால் நான் இந்த கட்சியில் இணைந்துள்ளேன் என்றார். மேலும் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?
துப்பறிவாளன், இரும்புத்திரை, ஹீரோ, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாலா சித்தப்பா. இயக்குநர் பாலாவின் அண்ணன் மகளான இவர் முதலில் டிவி சீரியலில் நடித்தார். பிறகுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடிகையாக அறிமுகமான திரைப்படம் 'துப்பறிவாளன்'. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு விஜய் டிவி புகழை வைத்து படம் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
சினிமாவில் நடித்துக்கொண்டே வழக்கறிஞர் பணியையும் செய்து வந்த ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பாஜகவின் கலை - கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தார்.
இந்த சூழலில் தான் பாஜகவில் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி அக்கட்சியில் இருந்து விலகியபின் தவெகவுக்கு ஆதரவாக விவாதங்களில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.