கரூர் செல்லாதது ஏன் – விஜய் விளக்கம்!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

கரூர் பிரச்சார மரணங்கள் தொடர்பாக தவெக தலைவர் விஜய், கரூர் செல்லாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில், தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, முதல் முறையாக அது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், “என் வாழ்க்கையில் இந்த மாதிரி வலி மிகுந்த தருணத்தை எதிர்கொண்டது இல்லை. மனசு முழுக்க வலி. வலி மட்டும்தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே காரணம் அன்பும், பாசமும் தான். அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களின் பாதுகாப்பை முக்கியமாக நினைத்தேன்.

அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற இடங்களில் தான் அனுமதி கேட்டோம். ஆனால் நடக்கக்கூடாது நடந்துவிட்டது.

‘நானும் மனுஷன் தானே...’ அந்த நேரத்தில் அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அந்த ஊரை விட்டு என்னால் எப்படி கிளம்பி வர முடியும்...? நான் திரும்பி அங்கு சென்றிருந்தால் அங்கு பதற்றமான சூழலும் அசம்பாவிதங்களும் நடந்திருக்கும். அதை தவிர்க்கவே அங்கு செல்லவில்லை.

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன சொன்னாலும் இது ஈடாகாது. சிகிச்சை பெற்று வருபவர்கள் குணம் பெற வேண்டும்.

கூடிய சீக்கிரம் உங்களை சந்திப்பேன். என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மைகளை எல்லாம் சொல்லும்போது, கடவுளே நேரில் வந்து உண்மைகளை சொல்வது போல் இருந்தது. நிச்சயம் விரைவில் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும்.

அனுமதி கொடுத்த இடத்தில் நாங்கள் பேசிவிட்டு வந்தோம். அதுதவிர நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இருந்தாலும் எங்கள் கட்சியினர் மீதும் சமூக ஊடகத்தினர் மீதும் வழக்கு போடுகிறார்கள்.

சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. ஆனால், அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.

நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com