தமிழகத்திற்கு மட்டும் ஏன் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கவில்லை?

TN procures electricity at high price from outside
கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல்
Published on: 

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திற்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது, தமிழகத்திற்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

"த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.

அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?

இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் ஊழல் தடுப்பு - கண்காணிப்பு இயக்குநரகம் அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்." என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram