கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பா…? – சென்னை மெட்ரோ விளக்கம்!

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பா…? – சென்னை மெட்ரோ விளக்கம்!
Published on

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தகவல் வந்த நிலையில் சென்னை மெட்ரோ விளக்கமளித்துள்ளது. .

தமிழ்நாட்டின் இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான மாநில அரசின் ரூ. 60,000 கோடி நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக, மதுரை மெட்ரோ திட்டம் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 32 கிலோமீட்டர் தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களுடன் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

இதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இதுபோன்று கோவைக்கு ரூ.10,740 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), 2023 ஜூலையில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

கோவை, மதுரைக்கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

இதனால் வரும் 2030க்குள் மதுரையிலும், கோவையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தசூழலில் இன்று (நவம்பர் 18) கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல்கள் வந்தன.

மெட்ரோ ரயில் திட்ட கொள்கை 2017ன் படி 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கமுடியும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கோவையில் 15.84 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும், மதுரை நகர்ப்புற பகுதியில் 14.7 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்து மத்திய அரசு நிராகரித்ததாக கூறப்பட்டது.

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் குறித்த தமிழக அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக சென்னை மெட்ரோ விளக்கமளித்துள்ளது.

“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை… நிராகரிப்பு என்பது தவறானது. வழக்கம்போல் அந்த திட்டம் தொடரும். இதுதொடர்பான விளக்க அறிக்கை விரைவில் வெளியிடப்படும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை காட்டிலும் தற்போது இந்த நகரங்களில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பது குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும்” என்று சென்னை மெட்ரோ கூறியிருக்கிறது. .

logo
Andhimazhai
www.andhimazhai.com