Annamalai
அண்ணாமலை

யாரையோ காப்பாற்ற தந்தை, மகன் மரணமா? – கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Published on

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய சிவராமன், அவரது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் சிவராமன் இன்று காலையில் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை நேற்றிரவு மதுபோதையில் சாலை விபத்தில் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். வழக்கில் தொடர்புடைய சிவராமன், அவரது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று (ஆகஸ்ட் 23) காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன.

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com