இனி ஆம்புலன்ஸ் மீது கை வைப்பீங்க…? - தமிழக அரசு எச்சரிக்கை!

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்
Published on

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் வாகனத்தை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை துறையூர் பேருந்து நிலைய பகுதிக்கு அவர் வந்தாா். அவா் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அதிமுக கூட்டத்துக்குள் நுழைந்த 108 ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி அதிலிருந்த பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடா்ந்து வாகனத்துக்குள் நோயாளி இருக்கிறாரா என கட்சியினா் சோதனை செய்தனர். அப்போது நோயாளி இல்லாததை பார்த்ததும், ஆத்திரமடைந்து கூச்சலிட்ட அதிமுகவினரிடம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நோயாளியை ஏற்றுவதற்காக செல்வதாக கூறியும் அதிமுகவினர் சமாதானம் அடையவில்லை.

தன்னுடைய பிரசார பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி ஆளுங்கட்சியினர் இடையூறு ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அண்மையில் புகார் கூறியிருந்தாா். இதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் வாகனத்தை தாக்கினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com