பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரை, அவருடைய கணவரே கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக தாமரைச்செல்வி பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களாக, குடும்பப் பிரச்னை காரணமாக ஆட்டோ ஓட்டுநரான கணவர் அர்வினைப் பிரிந்து பெற்றார் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை வாகனச் சோதனையை முடித்துவிட்டு, தாமரைச்செல்வி மாலை 7 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்த அவருடைய கணவர் அர்வின், தாமரைச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால், கழுத்து, கைப்பகுதி உட்பட 11 இடங்களில் சரமாரியாகக் குத்தினார். அதில் படுகாயமடைந்த தாமரைச்செல்வி, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்தார்.
மனைவியைக் குத்திய பின்னர், தன்னுடைய மார்பில் கத்திரிக்கோலால் குத்திக்கொண்ட அர்வின், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.