
"தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், மகளிர் உரிமைத் தொகை கிடைக்க உறுதி செய்வேன்." என தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், புதிய புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள், அதுமட்டுமல்லாமல் கட்சி நிகழ்ச்சிகள், ஆய்வுக்கூட்டங்கள், கழக குடும்பங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் என இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள், ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இடையில் உங்களை எல்லாம் பார்க்கும் நேரத்தில், அதுவும் பழனியப்பன் அவர்களின் இல்லத்தின் மணவிழா நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் பார்க்கும் நேரத்தில் எனக்கே ஒரு ரிலாக்ஸ் ஏற்பட்டிருக்கிறது.
நம்முடைய மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கக்கூடிய மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் மாதாமாதம் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழங்கிக்கொண்டிருக்கின்றோம். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அந்த ஆயிரம் ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறேன்.
ஏற்கெனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 13 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக மேலும் கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, அது இன்னும் உயரும் என்று கூட சொல்லியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாளில்தான், மற்றொரு பெருமிதமான செய்தியும் வெளியானது. அதை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அதாவது, ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான அறிகுறியாக இருக்கும் GDP வளர்ச்சியில் இன்றைக்கு தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகியிருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை!
நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவ்வளவோ தடங்கல்கள். எவ்வளவோ சோதனைகள். அந்த சோதனைகளையெல்லாம் தாண்டி இன்றைக்கு சாதனை படைத்திருக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. மற்றொரு பக்கம், தேர்தல் வேலைகள். அதில் குறிப்பாக SIR என்ற ஒரு நடைமுறையை கொண்டுவந்து அந்த பணியும் நடைபெற்றுவருகிறது.
தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவு அறிவிக்கும் வரை நமக்கு வேலை இருக்கிறது. நீங்கள் மறந்துவிடக் கூடாது. இரண்டு வாரத்தில் டிசம்பர் முடிந்து ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு வரப்போகிறது. அதற்குபிறகு, தேர்தலுக்கு சிறிது நாட்கள்தான் இருக்கிறது. அதனால் நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது நம்முடைய சாதனைகள், திட்டங்கள், நாம் ஆற்றக்கூடிய பணிகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. முழுவதுமாக அதை நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நம்முடைய சாதனைகளை, திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடத்தில் எடுத்து செல்லக்கூடிய அந்த பணிகளில் ஈடுபட்டு அவையெல்லாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். ஏழாவது முறையாக திராவிடமாடல் ஆட்சி உருவாகியிருக்கிறது என்ற பெருமை நமக்கு வந்தாக வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும். அதில் உங்கள் எல்லோருடைய பங்கும் அதில் நிச்சயமாக இருக்க வேண்டும்.” என்றார்.