மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இனி 1,30,69,83 சகோதரிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள் என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்நேற்று நடைபெற்றது.
இதில், சமூக ஆர்வலரான ’பத்ம பூஷன்’ கிருஷ்ணாம்பாள் கெஜநாதன், நடிகை தேவயானி, இயக்குநர்கள் வசந்த பாலன், ஞானவேல், நடிகர் சத்யராஜ், இஸ்ரோ அதிகாரி நிகர் ஷாஜி, அமுதா ஐஏஎஸ், நடிகை ரோகிணி என பலரும் கலந்து கொண்டு அரசையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் வாழ்த்தி பேசினர்.
இதைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை திட்ட 2 ஆம் கட்ட பயணாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கணக்கு அட்டையை வழங்கினார்.
இதன்பின் பேசிய அவர், “ நான் இங்கு வந்து 3 மணி நேரம் ஆகிறது. நிகழ்ச்சியில் பேசிய பெண்களின் தன்னம்பிக்கைக் கதைகள் நெஞ்சை உருக்குகிறது. புது நம்பிக்கையை தருகிறது” என்றார்.
சிறப்பு விருந்தினர்களான 100 வயது நிறைந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் இளம் வெற்றியாளரான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் ஆகியோரைப் பாராட்டி பேசினார்.
குறிப்பாக துளசிமதியை பற்றி பேசும்போது, “அவர் விளையாட்டுத் துறையில் மட்டுமல்லாமல், “அரசியல் துறைக்கு வந்தாலும் இவங்கதான் நம்பர் ஒன்னா இருப்பாங்க” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாதி, மதம், இனம், மொழி, பாலின பாகுபாடு இல்லாத, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற சமத்துவ சமுதாயமாகத் தமிழ்நாடு இயங்க வேண்டும் என்பதே இலட்சியம்.
2021 மே 7ஆம் நாள் தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், தமிழக அரசு திராவிட மாடல் அரசு என்று கூறிப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்த தொடங்கினோம்.
இந்த திட்டம் என்பது ‘உதவித்தொகை’ அல்ல, ‘உரிமைத்தொகை’. இந்த திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
அண்டை மாநிலங்கள் கூட இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், கர்நாடகா, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம் உட்பட 10 மாநிலங்களில் வழங்கப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்தியவர்கள் கூட அவர்கள் மாநிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்து, இந்தத் திட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆயிரம் ரூபாய் ஒரு தொடக்கம் மட்டும் தான். 10 ஆண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, இந்தியாவில் எந்த மாநிலமும் சாதிக்காத அளவுக்கு 16% GSDP வளர்ச்சியை திராவிட மாடல் அரசு சாத்தியப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இனி 1,30,69,83 சகோதரிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து கிடைக்கும்.
வருங்கால வரலாற்று ஆசிரியர்கள், மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினுடைய திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது என்று எழுதுவார்கள்.
இந்த உரிமைத் தொகை தங்கள் உயர்வுக்கு மட்டுமல்லாமல், பிள்ளைகளின் கல்விக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், கல்விதான் சிறந்த முதலீடு. யாராலும் அளிக்க முடியாத சொத்து. பெண்கள் முன்னேற்றமும், பெண் கல்வியும் முக்கியம்.
தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும். பெண்களின் உரிமையும் உயரும். உறுதியாக சொல்கிறேன்” என்று கூறினார்.