இறங்கி வர மாட்டீங்களா…? அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி கிராமத்தினர்!

அமைச்சர் பொன்முடி மிது சேற்றை வீசிய கிராமத்தினர்
அமைச்சர் பொன்முடி மிது சேற்றை வீசிய கிராமத்தினர்
Published on

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்துக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது கிராம மக்கள் சேற்றை வாரி வீசி சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. அப்போது வீசிய சூறைக்காற்றாலும், தொடர் கனமழையாலும் விழுப்புரம் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து, பல இடங்களில் தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. அதேபோல ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன.

அதையடுத்து வெள்ளத்தில் சேதமான மரக்காணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினர்.

நேற்று தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருவேல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் அந்த சாலைகள் சேதமடைந்ததால், விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியர் பழனியுடன், அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, விழுப்புரம் தி.மு.க மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி போன்றவர்கள் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு பகுதிக்குச் சென்றார்.

அப்போது அமைச்சர் பொன்முடி தன்னுடைய காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. அதில் கோபமடைந்த மக்கள், 'காரில் இருந்து இறங்க மாட்டீங்களா... நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள்?' என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், அவர்கள் மீது மழை சேற்றை வாரி இறைத்தனர். அத்துடன் உடனே சாலை மறியலிலும் அமர்ந்தனர்.

அதை எடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சாலை மறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும், காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com