எழுத்தாளர் பூமணி சென்னையில் காலமானார்!

Writer Poomani
எழுத்தாளர் பூமணிTamil wiki
Published on

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 79.

இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகே உள்ள ஆண்டிபட்டியில் பிறந்தார். இவர் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய மூத்த எழுத்தாளர் ஆவார். 

இவரின் முதல் சிறுகதையான ‘அறுப்பு’ 1971-ல் தாமரை இதழில் வெளிவந்தது.

வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு. அஞ்ஞாடி, கொம்மை ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

இவரின் 'அஞ்ஞாடி' என்னும் நாவலுக்கு 2014ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது.

இவர் எழுதிய 'வெக்கை'  நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலை வைத்துதான் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, விளக்கு விருது, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

எழுத்தாளராக மட்டுமின்றி திரைப்படத் துறையிலும், இவர் தன் தடத்தைப் பதித்துள்ளார்.

தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனமும் தூதர்சனும் இணைந்து தயாரிக்க, 1997-ல் 'கருவேலம்பூக்கள்' திரைப்படத்தை இவர் இயக்கினார். இப்படம் பல்வேறு முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளது.

மறைந்த பூமணியின் உடல் சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை 14ஆம் தேதி அங்கு இறுதிநிகழ்வு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com