எஸ்ஐஆருக்கு பிறகு தங்களுக்கு ஓட்டு இருக்குமோ இருக்காதோ என பலரும் பீதியில் இருக்க, 40 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வாக்காளர் அட்டையும், ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்ட சம்பவத்தை தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான சு.பொ.அகத்தியலிங்கம் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அதில், ”1982 ஆம் ஆண்டு என் தந்தை இறந்துவிட்டார். அதை யாரோ திரித்து நான் இறந்துவிட்டதாகச் சொல்ல, என் ரேஷன் கார்டு, வாக்காளர் உரிமை இரண்டுமே ரத்தாகிவிட்டது. இரண்டுக்கும் அங்கும் இங்கும் அலைந்தேன். ‘நான் சாகவில்லை’ என் நிரூபித்தால்தான் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றனர். செய்வதறியாது திகைத்தேன்.
அப்போது பட்டாளம் மணிக்கூண்டு அருகே சிபிஎம் பொதுக்கூட்டம். தோழர்.ஆர்.உமாநாத்தும் நானும் பேச்சாளர்கள். மேடையில் உமாநாத்திடம் என் சோகக்கதையைச் சொன்னேன். அவர் கூட்டத்தில் பேசும்படி சொன்னார்.
“செத்துப்போன அகத்தியலிங்கம்…” பேசிக்கொண்டிருக்கிறேன் என தொடங்கி என் கதையை சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன். தோழர் உமாநாத்தும் செத்தவரோடு மேடையில் பேசுகிறேன் எனத் தொடங்கினார்.
அப்போது எம் ஜி ஆர் ஆட்சி மறுநாள் என்னைத் தேடி சிவில் சப்ளை அதிகாரிகள் வந்து புது ரேஷன் கார்டைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சிலர், இந்த சம்பவத்தை நினைத்து சிரிப்பதா, வருத்தப்படுவதா என பதிவிட்டுள்ளனர்.