முடக்கப்பட்ட சேனலை மீட்ட யூடியூபர் கரிகாலன்!

முடக்கப்பட்ட சேனலை மீட்ட யூடியூபர் கரிகாலன்!

முடக்கப்பட்ட தன்னுடைய மூன்று யூடியூப் சேனல்களை சட்டப்போராட்டத்தின் மூலம் மீட்டுள்ளார் யூ டியூபர் கரிகாலன்.

சமூகநீதி, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, மாநில உரிமை தொடர்பான வீடியோக்களை கரிகாலன் என்கிற யூட்யூபர் ரூட்ஸ் தமிழ் என்கிற தன்னுடைய சேனலில் வெளியிட்டு வந்தார். அந்த சேனலில் பதிவேற்றப்பட்டிருந்த எட்டு வீடியோக்களை சுட்டிக்காட்டி ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி யூடியூப் நிறுவனம், ரூட்ஸ் தமிழ் சானலை ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் முடக்கியது.

அதனைத் தொடர்ந்து, கரிகாலன் ரூட்ஸ் 24X7 என்ற சேனலை தொடங்கினார். ஆள்மாறாட்டம் (Impersonation) செய்ததாக அதுவும் யூடியூப் நிறுவனத்தாலேயே முடக்கப்பட்டது. பின்னர் டிரைப்ஸ் என்ற சானல் தொடங்கப்பட்டு அதுவும் முடக்கப்பட்ட நிலையில், மூன்று சேனலையும் சட்டப் போராட்டம் நடத்தி கரிகாலன் மீட்டுள்ளார்.

இது குறித்து அவரிடம் பேசினோம்,

“மூன்று சேனலும் முடக்கப்பட்டது தொடர்பான எங்கள் வழக்கை வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் நடத்தினார்.

ரிச்சர்ட்சன் வில்சன் மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ரூட்ஸ் தமிழ் சேனல் மீதான முடக்கத்தை நீக்க வேண்டும், ரூட்ஸ் 24X7 மீண்டும் ரீ ஸ்டோர் பண்ண வேண்டும், டிரைப்ஸ் சேனலை முடக்கக்கூடாது என்று அந்த மனுக்களில் கூறியிருந்தோம்.

நீதிபதி அனிதா சுமந்த் இந்த மனுக்களை விசாரித்தார். ஒன்றிய அரசு சார்பில் ஏ.எல்.சுந்தரேஷ் ஆஜரானார். அவர் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை. நீதிபதி அனிதா சுமந்த், டிரைப்ஸ் சேனலை முடக்க கூடாது என வாய்மொழி உத்தரவிட்டார். அதனால், டிரைப்ஸ் சேனலை முடக்க மாட்டோம் என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

வழக்கு விசாரணைக்கு வந்த அடுத்த நாளே ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடமிருந்து விசாரணைக்கு டெல்லி வரச்சொல்லி அழைப்பு வந்தது, சேனல் முடக்கப்பட்டதற்கான புகாரை சொல்லாமல், தண்டனைப் பிரிவை வாசித்தார்கள். கடைசி வரை அவர்கள் புகாரை கூறவில்லை. இருந்தாலும் எங்கள் தரப்பு விளக்கத்தை கூறினோம்.

டெல்லியிலிருந்து வந்த பிறகு, ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. “இனிமேல் இப்படியெல்லாம் வீடியோ போடமாட்டோம் என மன்னிப்புக் கேட்டு மின்னஞ்சல் ஒன்று அனுப்புங்க” என்று கேட்டார்கள். ”அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நான் எந்த வீடியோவையும் போடவில்லை. அதனால், நான் மன்னிப்புக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பமாட்டேன்” என்று சொல்லிவிட்டேன்.

பிறகு வழக்கறிஞரின் ஆலோசனையின்படி, “நாங்கள் அரசியலமைப்புச் சட்ட த்துக்கு எதிராக எதுவும் நாங்கள் செய்யவில்லை. எங்களின் சேனல் மீதான தடையை நீக்குங்கள்” என்று மின்னஞ்சல் அனுப்பினேன்.

பின்னர், வழக்கின் மீதான விசாரணை பிற்பகல் வரப்போகிறது என்றிருந்த நிலையில், ரூட்ஸ் தமிழ், ரூட்ஸ் 24X7 சேனல் மீதான தடையை நீக்கிவிட்டதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடமிருந்து மின்னஞ்சல் வந்தது.

இந்த வழக்கில் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் வாதிடவே இல்லை. வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஒரு பைசா கூடா வாங்காமல் வழக்கை நடத்திக் கொடுத்தார்.” என்றார் கரிகாலன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com