அடுத்து வருவது திராவிடம் 2.0 - மு.க.ஸ்டாலின் பரவசப் பேச்சு!

அடுத்து வருவது திராவிடம் 2.0 - மு.க.ஸ்டாலின் பரவசப் பேச்சு!
Published on

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர், திருச்சி சிறுகனூரில் உருவாகிவரும் பெரியார் உலகத்துக்கு தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். 

மேலும், “ நூறாண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மக்களுக்கு கிடைத்ததை, வேக வேகமாக பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்! சுயமரியாதை இயக்கம் தேடித் தந்த உயர்வை பறிக்கின்ற சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

அறிவியலை பின்னுக்குத் தள்ளி, பிற்போக்குத்தனங்களையும், ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான சூழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது!

தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும், தீவிரமாகவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இதையெல்லாம் தடுத்து நிறுத்துகின்ற அரண்தான், திராவிட மாடல்! அதனால்தான், “அண்ணாவும் - கலைஞரும் சொல்லாததை இந்த ஸ்டாலின் ஏன் சொல்கிறான்?” என்று டென்ஷன் ஆகிறார்கள். அவர்களுக்கு எரியட்டும் என்று தான் நானும் திரும்பத் திரும்ப திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்!

அடுத்து, திராவிட மாடல் 2.0 என்று சொல்லப் போகிறோம்! வரப் போவது அரசியல் தேர்தல் கிடையாது; தமிழினம் தன்னை காத்துக் கொள்ள வேண்டிய சமுதாய தேர்தல்!

கொள்கையற்ற அ.தி.மு.க.வினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம்! வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்! இதை திராவிடத்துக்கு எதிரான
பா.ஜ.க-வும்,  "திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது" என்று சொன்ன திரு. பழனிசாமி அவர்களின் அ.தி.மு.க.,வும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்!

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தவேண்டும்!” என்றும் ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com