
சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
அப்போது, துறை அமைச்சர் ஆனந்துடன் மற்ற அமைச்சர்களும் இடையிடையே குறுக்கிட்டனர்.
வீடு கட்டும் திட்டம் குறித்து கடந்த ஆட்சியில் தொடங்கி இப்போது தரைத்தளத்துடன் நிற்பதாக அமைச்சர் ஆனந்த் குறைகூறினார்.
அதற்கு பதில் அளித்த பெரியசாமி, முந்தைய இரு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட வீடுகள் ஆண்டுக்கு ஒரு இலட்சமும், கடந்த ஆண்டில் 80 ஆயிரமும் என வேலைகள் முடிவடைந்துவிட்டன என்றும், இந்த ஆண்டில் நிர்வாக ஒப்புதல் தரப்பட்ட 35 ஆயிரம் வீடுகளில் 8 ஆயிரம் வீடுகளுக்கு தரைப்பகுதிவரை கட்டுமானம் நடந்திருக்கலாம் என்றும் அதைப் பார்த்துவிட்டு மொத்த திட்டத்தையும் குறைகூற முடியாது என்றும் கூறினார்.