அந்திமழை இளங்கோவன் கல்வி அறக்கட்டளை தொடக்கம்!
அந்திமழை இதழ் - ஊடகக் குழுமத்தின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான மருத்துவர் ந. இளங்கோவன் பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் நேற்று மாலையில் தொடக்க விழா நடைபெற்றது.
மூத்த நடிகரும் பன்முகக் கலைஞருமான சிவகுமார் அறக்கட்டளையின் இலச்சினையை வெளியிட்டு முறைப்படி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வக்குமார், வேப்பேரி கல்லூரி முதல்வர் இரா.கருணாகரன், தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், அந்திமழை இதழ் குழுமத்தின் இயக்குநர் சரஸ்வதி இளங்கோவன், அந்திமழை இதழின் ஆசிரியர் அசோகன், தமிழ் இளங்கோவன், கதிர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் க.ந.செல்வக்குமார், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவர்கள் இலக்கியம், புத்தக வாசிப்பு ஆகியவற்றில் அதிகமான ஆர்வம் காட்டினார்கள்; மருத்துவம் படித்து பல பேர் இன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் மாநில அளவில் தலைசிறந்த அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர்; அந்தப் பொற்காலம் மீண்டும் வரவேண்டும்; இலக்கியத்தை மருத்துவ மாணவர்கள் இடைவிடாது படிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே எனும் தலைப்பிலான கால்நடை மருத்துவர்களின் அனுபவங்கள் அடங்கிய நூலையும் சிவகுமார் வெளியிட்டார்.
நூலைத் திறனாய்வுசெய்து மருத்துவர் சங்கர சரவணன் பேசியது:
“ நான் கால்நடை மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது ஒரு முறை ஆல் இண்டியா ரேடியோவுக்குக் கூட்டிப் போனார்கள். அப்போது, தென்கச்சி சுவாமிநாதன் ஒரு தகவலை எங்களிடம் பகிர்ந்துகொண்டார். வேளாண் அறிவியல் பட்டதாரியான அவரிடம் வானொலி நேர்காணலின்போது அதிகாரிகள் ஏன் விவசாயத் துறையைவிட்டு இந்தத் துறைக்கு வரநினைக்கிறீர்கள் எனக் கேட்டார்களாம். அவர் சொல்லியிருக்கிறார், விவசாயம் செய்வதைவிட சொல்வது எளிதானது என்று. அவரின் நகைச்சுவையான பேச்சைக் கேட்டு வேலைக்கு எடுத்துக்கொண்டார்களாம். கால்நடை மருத்துவம் படித்துவிட்டு வேறு துறைகளில் பணியாற்றும் சிலர் ஒன்றுகூடல் ஒன்றில் பங்கேற்றோம். அதை அண்ணன் சிவக்குமாருக்கு அனுப்பிவைத்தேன். அதற்கு முன்னரும் பின்னரும் வெவ்வேறு தருணங்களில் அதே நண்பர்களைக் குறிப்பிட்டு, தெரியுமாடா என்றார். தெரியும்ணே அவரும் கால்நடைமருத்துவர்தானே என பதில் சொல்ல, அவரோ, மாட்டுவைத்திய படிச்சிட்டு ஒருத்தனும் மாட்டுக்கு வைத்தியம் பாக்கலை போல இருக்கே என்றார் சிரித்துக்கொண்டே! ஆனால் படித்த கால்நடை மருத்துவத்துறையிலேயே பணியாற்றுகிறவர்கள் அதிகம். அப்படிப் பணியாற்றும் 23 மருத்துவர்களின் அனுபவங்கள்தான் இந்த நூல். மருத்துவ மாணவர்கள் மட்டுமல்ல, அனைவருமே படிக்கவேண்டிய நூல் இது. அவ்வளவு அருமையாக, சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.” என்று மரு. சங்கர சரவணன் கூறினார்.
விழாவில் சிவகுமார் ஆற்றிய சிறப்புரை:
” 1969இல் பிறந்த இளங்கோவனின் ஆர்வம், உழைப்பையெல்லாம் பார்த்தால் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டிய மனுசன். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வாணிபம் செய்திருக்கிறார். கல்லூரி காலத்தில் தொடங்கிய அந்திமழை பத்திரிகையை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த வயதில் இறந்துபோய்விட்டார். என்னுடைய கோணத்தில் இந்த அறக்கட்டளையைவிட சமூகத்துக்குச் செய்ய ஒன்றுமே இல்லை. நான் பிறந்த 10ஆவது மாதத்தில் என் அப்பா இறந்துவிட்டார். அப்பா கருப்பா சிவப்பா என எனக்குத் தெரியாது. அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில் 14 வயது அண்ணன் காலையில் சிரித்துக்கொண்டிருந்த அண்ணன், சாயங்காலம் பிளேக் நோயால் செத்துப்போய்விட்டான். இது நாடு சுதந்திரத்துக்கு முன்னர்! அரளிக் கொட்டையை அரைத்துக் குடித்திருந்தால் 10 பேர் குளோஸ்! ஆனால் சாமிவிட்ட பிள்ளைகளைக் கொல்லக்கூடாது என எங்கள் அம்மா நினைத்ததால் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். ஒரு விதவைத் தாய். வருடம் முழுவதும் கேழ்வரகு சாப்பிட்டு பாடுபட்டு ஆண்டுமுடிவில் கல்விக்கடனைக் கட்டுவார். அந்தக் கடனைக் கொடுத்தவர் எங்கள் மாமா ஒருவர். அவர் கடன் கொடுக்கவில்லை என்றால்...? இப்போது சென்னைக்கு வந்து நடிகனாகி நிற்கிறேன். எனவே கல்விக்கு நீங்கள் தரக்கூடிய சேவை, இதற்கு இணையான வேறு சேவையே இல்லை. கல்விக்குச் செய்யும் உதவி ஒரு விதை. அந்த விதை உரம்விட்டு ஆலமரமாகி நிற்கும்போது பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகள் பிழைக்க வாய்ப்பு உண்டு.
என்னுடைய நூறாவது பட சம்பளம், ரூ.25 ஆயிரம். இப்போ சூர்யாவின் மேக்கப் மேன் 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டிருக்கிறார். 1970களில் அதை வங்கியில் போட்டு வந்த வட்டி 2,250 ரூவா. அதை வைத்து முதல் பரிசு ஆயிரம், 2ஆவது பரிசு 750 ரூ., 3ஆவது பரிசு 500 ரூ. 25ஆம் ஆண்டு நடிக்கும்போது சூர்யா அகரம் அறக்கட்டளை தொடங்கினார். இப்போது 46ஆவது ஆண்டு குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 5.5 இலட்சம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தத் தொகையை உயர்த்தவேண்டுமென பிள்ளைகள் கேட்டார்கள். மறுத்துவிட்டேன். ஏனென்றால் பேரன் பேத்திகள் காலத்திலும் இது தொடரவேண்டும். இன்று முடிகிறது 10, 15 இலட்சம் கொடுக்கலாமென நினைப்போம். அடுத்த தலைமுறையிலும் தொடரவேண்டும். அந்திமழையைப் போல இளங்கோவனின் காலத்துக்குப் பிறகும் இது தொடரட்டும்!” என்று சிவகுமார் பேசினார்.
விழாவில் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். மாணவி நிஷாந்தினி தொகுப்புரை வழங்கினார். அறக்கட்டளையின் நோக்கம் குறித்து மருத்துவர் க.நடராஜன் உஉரையாற்றினார். மருத்துவர் மாரியப்பன் நன்றியுரை வழஙகினார்.