பா.ம.க. அன்புமணியுடன் சமரசப் பேச்சு ஏதும் நடைபெறவில்லை என்று அவரின் தந்தை இராமதாசு மறுத்துள்ளார்.
விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
அன்புமணி தன் தாயார் பிறந்த நாளுக்காகவே வந்திருந்தார்; சமரசம் எனக் கூறுவது பொய் பொய் பொய் என மூன்று முறை சொல்லி, இராமதாசு சிரித்தார். சதி சதி சதி என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.
திட்டமிட்டபடி தன்னுடைய தரப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகில் நாளை நடைபெறும் என்றும் இராமதாசு கூறினார்.
ஊடகத்தினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டதற்கு, அவர் முதலில் செயல் தலைவர் பதவியையே ஏற்றுக்கொள்ளவில்லையே என எதிர்க்கேள்வி கேட்டவர், அன்புமணி தன்பாட்டுக்கு எதையோ செய்துகொண்டிருக்கிறார் என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காந்திமதி மகன் அதிலிருந்து விலகியதால், அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படுவார்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்காமல் மழுப்பிவிட்டார்.