அமித்ஷாவுக்கு நன்றி நன்றி! - கி.வீரமணி

தி.க. தலைவர் கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி
Published on

அண்ணல் அம்பேத்கர்பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சின்மூலம் – ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்களின் உண்மை உருவம் வெளியில் வந்துவிட்டது; அதற்காக நன்றி! நன்றி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இன்று இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

”நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் (17.12.2024) நாடாளுமன்றத்தில் பேசுகையில், தனது ஆழ்மனதிலும், தம்மை வழிநடத்திடும் தனது மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அடிநீரோட்டமாக என்றும் ஓடிக் கொண்டிருக்கும் கருத்துகளை - எரிச்சல் மிகுதியால் ஒப்பனை கலைந்து, உண்மை வெளியே வரும் என்ற அனுபவத்திற்கு ஏற்ப, அதுவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தினை, அதன் 75 ஆம் ஆண்டில் பெருமைப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட விவாதத்தில் பேசி நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைச் சொல்லுவது குற்றமா?

‘‘எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று இப்போதெல்லாம் (விடாமல்) பேசுவது ஒரு ‘‘பேஷனாகி'' (Fashion) விட்டது. அத்தனை தடவை அவர்கள் அதனை செய்வதைவிட (சொல்வதைவிட) ‘‘‘கடவுள், கடவுள்' என்று சொல்லிக் கொண்டே இருந்தால், சொர்க்கமாவது கிடைக்கும்'' என்று பேசியுள்ளார்,

சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை - ‘பாபா சாகேப்' என்று பல கோடி மக்களால் மதிக்கப்படும் ஒரு புரட்சியாளர்பற்றிய அவருடைய மூல அமைப்பு (ஆர்.எஸ்.எஸ்.) எண்ண ஓட்டம் எவ்வளவு எரிச்சலில் வெந்து வெளியாகி உள்ளது என்பதை மனோதத்துவ ரீதியான ஆய்வு அறிஞர்கள் மட்டுமன்றி, சாதாரண வெகுமக்கள்கூட நன்கு புரிந்துகொள்வார்கள்!

இன்று புரட்சியாளர் அம்பேத்கர்பற்றி பேசுவோர் எண்ணிக்கை நாளும் பெருத்து வருகிறது என்பதற்காக பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்ளுவதற்குப் பதிலாக, அப்படிப் பேசுவோர் பற்றிய நம் கவனமும், கவலையும் பெருகி - உண்மையான அம்பேத்கரின் கொள்கை வயப்பட்டோரின் பொறுப்பும் அதிகமாகிறது!

அம்பேத்கரை புகழ்வோர் இருவகை!
ஒரு சாரார் அம்பேத்கர் முகமூடி அணிந்த, உதட்டளவில் புகழ்பவர்கள் (குலதர்மிகள்).

மற்றொரு சாரார் அவரது சமத்துவ, ஜாதி ஒழிப்பு, ஹிந்து வர்ண பேத மனுமுறையை ஏற்காத, பெண்ணடிமைக்கு எதிரான அம்பேத்கரின் இலட்சியங்களை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு வாழும் சமதர்மிகள்.

முந்தைய அணியில், தங்களை காட்டி, ஷாகா முதல் ஆட்சிவரை - அரசியல் வாக்கு வங்கிக்கு அந்த அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொண்டு, அவரது கொள்கை ஒவ்வாமை காரணமாக பதவி விலகிட காரணமானவர்கள் – அவர்களே இப்போது அம்பேத்கர் நாமாவளி பாடுகிறார்கள்.

கொள்கைக்காக அம்பேத்கரை உள்ளத்தில், நெஞ்சில் ஏற்றியிருப்பவர்கள் சமூக, பொருளாதார, அரசியலில் மாற்றம் கொண்ட ஒரு புதிய சமூகம் காணும் முயற்சியில் என்றும் களமாடத் தயாராக உள்ள கொள்கையாளர்கள்!
ஒப்பனை எப்போதும் தற்காலிகமானதே;
உண்மை நிரந்தரமானது - உறுதியானது - இறுதியானது!

வாக்கு வங்கி அரசியலின் மூலதனமாக அம்பேத்கரைப் பார்ப்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்குப் புதிய உத்திகள், அவ்வளவே!

‘‘இல்லை, இல்லை; நாங்கள்தான் 24 கேரட் அம்பேத்கர் நேசர்கள். அவரைப் பெருமைப்படுத்தாமல் உண்ணமாட்டோம்; உறங்கமாட்டோம்’’ என்று அவர்கள் வீர வசனம் பேசுபவர்களானால் –
அவர்களை நோக்கி நாம் சில உண்மை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி எழுப்பும் வினாக்களுக்கு விடையளிப்பாளர்களா இந்த ‘திடீர் அம்பேத்கர் நாமாவளியினர்?'

ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யினரை நோக்கி  சில கேள்விகள்!

1. அம்பேத்கர், ‘‘பிறக்கும்போது ஹிந்துவாகப் பிறந்த நான், இறக்கும்போது ஒருபோதும் ஹிந்துவாக இறக்கமாட்டேன்'' என்று முழங்கினாரே, அதுபோலவே, ஹிந்து மதத்தைவிட்டு வெளியேறினாரே, அது ஏன்? எதற்காக?

2. அம்பேத்கரது, ஜாதியை அழித்தொழிக்கவேண்டும்; அதற்கு முட்டுக் கொடுக்கும் மூல கற்களான மதம், சாஸ்திர புராணம், கடவுள், பேதம் வளர்ப்பவை அனைத்தும்  அகற்றப்படவேண்டும் என்ற சமத்துவத்திற்கான வர்ண பேத ஒழிப்பை ஏற்கிறார்களா?

3. முதலாவது இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினை முன்மொழிந்தபோது, ‘‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாக’’ என்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு சட்டம் நிறைவேற்றி, பொருளாதார அடிப்படை கூடாது என்று திட்டமாக வழிவகுத்தாரே, அந்த இட ஒதுக்கீட்டினை இன்றுவரை அரசியல் தளத்தில் நின்று மாலை போட்டவர்கள், அவரை ஏற்பார்களா? ஆர்.எஸ்.எஸ். ஏன் அதன் அடிப்படையை மாற்றி, மற்றொரு திருத்தம் கொணர்ந்தது?

4. அவர் தலைமையில் உருவான அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கான உண்மையான எதிரி ஜாதி, வர்ண அமைப்பு முறை; அதை அகற்றி, அரசமைப்புச் சட்ட நெறியை செயல்படுத்த எடுத்த முயற்சிகள் என்ன?

முந்தைய காங்கிரஸ் ஆட்சி - நேருவின்மீது குற்றப் பத்திரிகை வாசிப்பது மட்டும் போதுமா?

அதனால்தானே அவர்கள் இன்று எதிர்க்கட்சி, வாய்மொழி உறுதிகள் தந்தவர்களுக்கே மீண்டும் பதவி வாய்ப்புகள் தந்துள்ள ஜனநாயக அடிப்படையில், அதில் நீங்கள் வருணாசிரம ஒழிப்பை கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்களை வழிநடத்திடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஜாதி ஒழிப்பை ஏற்கிறதா? பிரகடனப்படுத்துமா? செயல் திட்டம் உண்டா?

டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவராக இருந்து உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் அமுலான 26, நவம்பர் 1949 இல், சில நாளில் ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘ஆர்கனைசரில்‘ எழுதிய தலையங்கம் – கண்டனம் இவர்களது அம்பேத்கர் பற்றுக்கு ஆதாரமா? 75 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்ட வணக்கத்திற்கு உண்மையான சாட்சியமா?

‘ஆர்கனைசர்' பத்திரிகையில் எழுதிய தலையங்கம் என்ன?
இதோ:

‘‘But in our constitution, there is no mention of the unique constitutional development in ancient bharat. Manu's laws were written long before lycurgus of sparta or solon of persia. To this day his laws as enunciated in the manusmriti excite the admiration of the world and elicit spontaneous obedience and conformity. But to our constitutional pundits that means nothing’’.

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘பழைமையான நமது பாரதத்தில் நிலவிய தனித்துவமான அரசமைப்பு மேம்பாடுகள் குறித்து நமது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ‘மனு'வின் சட்டங்கள், ஸ்பார்டா தேசத்து லிகுர்கஸ், பெர்சியா தேசத்து சோலோன் ஆகியோருக்கு முன்பே எழுதப்பட்டவை. ‘மனுஸ்மிருதி'யில் இதுநாள்வரை ஒளிரும் அந்தச் சட்டங்கள், உலகின் மீதான மரியாதையை தன்னெழுச்சியான தழுவுதலை உறுதிப்படுத்துகின்றன. ‘‘நமது அரசமைப்புச் சட்ட வல்லுநர்களைப் பொறுத்தவரை அது ஒன்றுமில்லை.’’
இதை அப்போது இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லியவர்கள், இப்போதுள்ள சூழ்நிலையை உணர்ந்து எப்படிச் சொல்கிறார்கள் தெரியுமா?

இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதே கருத்தை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறார்!
தந்திரமூர்த்திகள் அல்லவா இவர்கள், அதனால்தான்!

2017 இல் அய்தராபாத்தில் நடைபெற்ற அகில பாரத் ஆத்வக்த (வழக்குரைஞர்கள்) பரிஷத் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத்,

‘‘That the Constitution was written, based on foreign sources which is something we must address. He wanted the Constitution to be changed in line with the value systems of the country. There seems to be an accident discomfort with the norms and values, enshrined in our present Constitution.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘இந்த அரசமைப்புச் சட்டம் வெளிநாட்டுத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அது குறித்து நாம் பேசியாக வேண்டும். நமது அரசமைப்புச் சட்டத்தை நமது தேசிய மதிப்பீடுகளுக்கேற்ப மாற்ற வேண்டும். அதற்கு மதிப்பீடுகளும், முறைமைகளும் அற்ற வழுக்கலைச் சரி செய்து, அவற்றால் நமது அரசமைப்புச் சட்டத்துக்கே மெருகேற்ற வேண்டும்.’’

ஜாதி வருண முறையை அவ்வளவு வெளிப்படையாக இன்றைக்கு ஆதரித்துப் பேசாமல், இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். குரு பீடத் தலைவர் ‘‘சர்ஜங் ஜாலக்’’ மோகன் பகவத் அதை சற்று மழுப்பி, காலத்திற்கேற்ப உருமாற்றத்துடன், ஆனால், அதே நேரத்தில் அடிப்படையை மாற்றிக் கொள்ளாமல் உறுதிபடக் கூறுவது என்ன?

டாக்டர் அம்பேத்கரை காட்சிப் படுத்ததலில் கவனம் கொள்வோர், அக்கொள்கைகளை ஆட்சிப்படுத்த செய்த முயற்சிகள் என்ன?

தெளிவுபடுத்தினால் நல்லது!


‘‘அம்பேத்கர், அம்பேத்கர்’’ என்று சொல்பவர்களுக்கு சொர்க்கம், நரகத்தில் நம்பிக்கையும் இல்லை; கடவுள் பெயரைச் சொன்னால், சொர்க்கம் உண்டு; அதற்கு நுழைவுச் சீட்டு தரும் உள்துறை அமைச்சருக்கு ஒன்றை நாம் தெளிவுபடுத்துகிறோம்.

பெரியார் - அம்பேத்கரின் பெயர் இவ்வுலக, பேதச் சமூக மாற்றம் – பயனுள்ள நடைமுறைக்கானது. 
கடவுள் பெயர் சொல்லும் சொர்க்கம் (அப்படி ஒன்று இருப்பதாக நீங்கள் நம்புவதால்) உண்மையான இவ்வுலக வாழ்விற்குத் தொடர்பு ஏதும் இல்லை என்பது.
அது ஒரு மாயா உலகம் (கற்பனை) - பெரியார், அம்பேத்கர் பெயரை முழங்கினால், உண்மை, யதார்த்தத்தை உணர்ந்த மக்களாக வாழ வைக்கும்.
உள்துறை அமைச்சருக்கு ஒரு வகையில் நன்றி!

இதை விளக்க வாய்ப்புத் தந்த உள்துறை அமைச்சருக்கு – உள்மனதை உலகுக்குக் காட்டிய உள்துறை அமைச்சருக்கும்,  அவரது கட்சியினருக்கும் நமது நன்றி! நன்றி!! நன்றி!!!” என்று கி.வீரமணி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com