
அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் போராட்டம் நடத்த முயன்ற சிபிஐ(எம்) கட்சியினர் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
”வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியும், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் சர்வதேச சட்டங்களை மீறி கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், உலகம் முழுவதும் வெனிசுலா மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தமிழகத்திலும் சிபிஐ(எம்) சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் அரசின் போர் வெறியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (05.01.2026) சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் அருகே ஜனநாயகப்பூர்வமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிடப்பட்டது.
அமெரிக்க தூதரகம் அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஒன்று சேர தொடங்கிய தோழர்களை உடனடியாக எவ்வித முன்னறிவிப்புமின்றி கிரிமினல் குற்றவாளிகளை கைது செய்வது போல் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். கண்ணியமற்ற முறையில் கட்சித் தலைவர்களின் சட்டையை பிடித்து இழுத்து அராஜகமான முறையில் உயர் காவல்துறை அதிகாரிகளே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
”அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்து உலகம் முழுவதும், வெள்ளை மாளிகை முன்பும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ(எம்) தோழர்கள் மீது அடக்குமுறைகளையும், அராஜகத்தினையும் சென்னை மாநகர காவல்துறை கட்டவிழ்த்துவிட்டது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. இது ஜனநாயக மாண்பாகாது. இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.” என்றும் பெ.சண்முகம் கூறியுள்ளார்.