ராவர்ட் வத்ரா பிரியங்கா
ராவர்ட் வத்ரா பிரியங்கா

அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி கணவர் போட்டி?!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோற்ற இராகுல் காந்தி மீண்டும் தற்போதைய வயநாடு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அமேதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா பூடகமாக தான் போட்டியிடத் தயார் என்று தெரிவித்துள்ளார். 

இந்திரா காந்தி குடும்பத்தின் நீண்ட காலத் தொகுதியான அமேதியில் கடந்த முறை பா.ஜ.க.வின் ஸ்மிரிதி ரானி வெற்றிபெற்றார். அவரே மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், காங்கிரசின் சார்பில் மீண்டும் ராகுல் காந்தியே இரு தொகுதிகளிலும் போட்டியிடுவாரா? வேறு யார் நிறுத்தப்படுவார் என்கிற கேள்விகளுக்கு பதில்தான் இல்லை. 

சோனியாகாந்தியின் தற்போதைய மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவது ஏறத்தாழ உறுதி எனும் நிலையில், அமேதியின் வேட்பாளரைப் பற்றிய தகவல் இறுதியாகவில்லை. 

இந்த நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா, ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில், அமேதியின் தற்போதைய எம்.பி. ஸ்மிரிதி ரானி மீது தொகுதி மக்கள் அதிருப்தியாக உள்ளனர் என்றும் தொகுதிப் பக்கமே அவர் வருவதில்லை; அதற்குப் பதிலாக காந்தி குடும்பத்தின் மீது குற்றம்சாட்டுவதற்கே அவருக்கு நேரம் போய்விடுகிறது என்றும் கூறினார். 

அமேதி தொகுதியில் உள்ளவர்கள் காந்தி குடும்பத்தவரையே மீண்டும் எம்.பி.யாக ஆக்கவேண்டும் என விரும்புவதாகவும், தான் அரசியலுக்கு வர விரும்பினால் தன்னைக்கூட அவர்கள் தேர்வுசெய்ய விரும்புவதாகவும் ராபர்ட் வத்ரா கூறினார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சோனியா காந்தி மீது நேசனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிந்தபோது, அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என ராபர்ட் வத்ரா பூடகமாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com