
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது, ஆறாவது மண்டலங்களில் பணியாற்றிவந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
நான்கு பெண் தொழிலாளர்கள் 13 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக மற்ற நான்கு பேர் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அருகில், பெரியமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் தூய்மைப் பணியாளர்கள் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தங்களின் கோரிக்கையைக் கேட்காத மாநகராட்சியைக் கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். அவர்களைக் கைதுசெய்ய காவல்துறை அங்கு திரண்டது.
அதையும் மீறி அவர்கள் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவரின் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.