அரசாணை 354 என்ன ஆச்சு முதல்வரே?- அண்ணாமலை கேள்வி

முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை, பா.ஜ.க.
முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை, பா.ஜ.க.
Published on

முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தை, மறைந்த கருணாநிதி கொண்டுவந்த அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள்; அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.    

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் இதைக் கூறியுள்ளார்.

” தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, மருத்துவர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், தற்போது அரசு மருத்துவர்களின் குரலைத் திட்டமிட்டு மவுனப்படுத்தி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காகப் போராடவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும்கூட, தி.மு.க. அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது. டிஏசிபி ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக அரசு மருத்துவர்களைக் கைதுசெய்வது, பணியிட மாற்றம் செய்வது என தண்டித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு இன்னும் அரசு வேலை வழங்கவில்லை. போராட்டக் களத்தில், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர், மணிக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்ததோடு சரி. சுகாதாரத் துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் முடிந்துவிட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே, தமிழக பா.ஜ.க. சார்பில், அரசு மருத்துவர்களுக்காகக் குரல் கொடுத்தோம். மக்கள் நல்வாழ்வும், மருத்துவர்கள் நலமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆனால், தி.மு.க. அரசு, தொடர்ந்து மருத்துவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஆரோக்கியம் இதில் அடங்கியிருக்கிறது என்பதைக்கூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணரவில்லை.

உடனடியாக, அரசாணை எண் 354 செயல்படுத்தப்பட வேண்டும். மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை வழங்கப்பட வேண்டும். மருத்துவர் மணிக்குமார் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com