அரசுக் கல்லூரிகளில் பிசி இடங்களை நிரப்ப ஏன் தடை?

government college
அரசுக் கல்லூரி
Published on

”தமிழ்நாட்டில் உள்ள  பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கணிசமானவை இன்னும் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்பக்கூடாது என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் வாய்மொழியாக  ஆணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட  இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்ப அரசே தடை போடுவது எந்த வகையான சமூகநீதி என்பது தெரியவில்லை.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேட்டுள்ளார். 

”தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து  ஜூன் மாதம் 03-ஆம் தேதி முதல்  ஜூன் மாதம்  14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து  ஜூன் 30-ஆம் தேதி முதல் கல்லூரிகள்  தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 25,345 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் கணிசமானவை பல்வேறு காரணங்களால் நிரம்பவில்லை. அவ்வாறு நிரப்பப்படாத இடங்களை  இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், மற்றும் நான்காம் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்தி சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

அதன் பிறகும், மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருந்தால், பட்டியலின/பழங்குடியின ஒதுக்கீட்டு இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள்  பிற வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கான இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது விதியாகும்.” என்று விவரித்துள்ள அவர்,

”ஆனால், பல கல்லூரிகளில் ஓரிரு கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பட்டு வருகின்றன. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“இதனால் அந்த இடங்களில் சேரலாம் என்று காத்திருந்த மாணவர்கள் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக தனியார் கல்லூரிகளில்  சேர்ந்து வருகின்றனர். இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு நினைத்தாலும் கூட அவற்றில்  சேருவதற்கு மாணவர்கள் எவரும் தயாராக இருக்க மாட்டார்கள்.” என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

”நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர குறைந்த எண்ணிக்கையில் 1.62 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.  தமிழக அரசு நினைத்தால் கடந்த காலங்களைப் போல 20% கூடுதல்  இடங்களை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் இடம் வழங்க முடியும்.  ஆனால், விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களையே காலியிடங்களில் சேர்க்காமல், அவர்களை தனியார் கல்லூரிகளுக்கு விரட்டியடிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தாமதப்படுத்தி, தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை அந்த சமுதாய மாணவர்களைக் கொண்டு  நிரப்புவதற்கு வாய்மொழியாக தடை விதிக்கும் அதிகாரத்தை கல்லூரிக் கல்வி ஆணையருக்கு யார் வழங்கியது என்பதும் தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அடுத்த சில நாள்களுக்கும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com