தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வரும் 18ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது.
அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 5,10,20 ஆண்டுகளுக்கு மேல் உயிர்தியாகம் செய்து, உடல் உறுப்பு இழந்து, மக்களுக்காக இரவு, பகல் பாராமல் ஆயிரக்கணக்காக மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள், உயர்நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று பணி உத்தரவு வைத்திருக்கும் 6788 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மின் விபத்தின் காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இவர்களின் மரணத்திற்கு யார் காரணம் என நீதி விசாரணை செய்வதற்கு சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
”மின்வாரிய நிரந்தர பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மின்சாரத் தொழிலாளர்கள் சம்மேளனம், வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் கோட்டை நோக்கி உரிமை மீட்பு பேரணி நடத்தவுள்ளது.
குறிப்பாக, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, முன்னெடுக்கப்படும் இந்த ஆர்பாட்டம் மற்றும் உரிமை மீட்பு பேரணிக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவை அளிப்பதோடு, துணை நிற்கும்.” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.