அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை- வேல்முருகன் புகார்

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி
Published on

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரத்தை வெளியிடுவதில் உண்மை தன்மை இல்லாமைக்கு காரணம் ஆள்பவர்களின் அலட்சியம்தான் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 31,336 பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 6,218 பள்ளிகள் என மொத்தம் 37,554 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-27 ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.  இப்பள்ளிகளில் 1.25 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மாணவர்-ஆசிரியர் விகிதம் சற்று முன்னேற்றம் அடைந்தாலும், ஓராசிரியர் பள்ளிகள் 3,671ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு 11,688 ஆசிரியர்களை மட்டுமே நியமித்துள்ளது. இதனால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்பறைகள் ஆசிரியர் இல்லாமல் இயங்குகிறது. மாணவர் சேர்க்கை அதிகரிப்பு குறைய ஆசிரியர் நியமனம் போதிய அளவில் இல்லாதது முக்கிய காரணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

”2026-27 கல்வியாண்டில் 5 லட்சம் புதிய மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 28ம் தேதி வரை 1-ம் வகுப்பு: 97,737 மாணவர்கள் 2 முதல் 8-ம் வகுப்பு வரை: 8,178 மாணவர்கள் மழலையர் (KG) வகுப்புகள்: 6,796 மாணவர்கள் என 1,12,711 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த எண்ணிக்கை அரசு + அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும். பொருந்தும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்படுகிறது. இச்சேர்க்கை மே, ஜூன் மாதம் வரை நடைபெறும். 2025ம் ஆண்டு தரவுகளின்படி தமிழகம் முழுவதும் 8,144 அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். இதனால் பல பள்ளிகளில் காலியிடங்கள் அதிகரித்தன. ஆதி திராவிட நலப் பள்ளிகள்: 2,075 ஆசிரியர் உட்பட 8,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிக்க அனுப்புவதில்லை. இரு ஆசிரியர்கள் பணியாற்றும் சில பள்ளிகளில் பணியாற்றுவர்கள் பள்ளி அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதியில் பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர், சிறுமிகளின் ஆதார் அட்டையை பெற்று பள்ளியில் சேர்ந்ததாக கணக்கு காட்டி, தங்களின் பதவியை தக்க வைத்துக்கொள்கின்றனர். அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

எவ்வித கட்டமைப்பு வசதிகளையும், காலியான பணியிடங்களை நிரப்பாமல் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டுமென ஆசிரியர்களை தொடர்ந்து இம்சிப்பதால் அவர்கள் பள்ளிக்கு வந்து படிக்காத மாணவர்கள் படிப்பதாக ஆவணங்கள் தயார் செய்து பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கியதில் கடந்த 10ஆம் வகுப்பு தமிழ் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 9000 மாணவர்கள் வராததற்கு காரணம் மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கடும் அழுத்ததால் போலியான வருகை பதிவேடில் வருகையை பதிந்ததுதான். பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர் சேர்க்கையில் போலியான தரவுகளுக்கு காரணம் மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயில ஆர்வம் காட்டாததுதான். அரசுப்பள்ளியில் அரசு ஊழியர்கள் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். அரசு பள்ளியில் பயின்றால்தான் அரசு பணிக்கு செல்ல முடியும் என்ற கொள்கை முடிவை அமைய உள்ள அரசு எடுத்து செயல்படுத்தினால்தான் ஏழை, நடுத்தர குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு தரமான கல்வியும், அரசு பணியும் கிடைத்து அவர்கள் பொருளாதார அளவில் முன்னேற முடியும்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com