அர்த்தமே இல்லைங்க சபாநாயகரே... உதயநிதி சொல்கிறார்!

சட்டப்பேரவையில் உதயநிதி
சட்டப்பேரவையில் உதயநிதி
Published on

சட்டமன்ற நேரலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதன் விவரம்:

“ தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன.

அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.

இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.

நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.

'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.

இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.

மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.

ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும். இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம்.” என்று உதயநிதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com