ஆசிரியர் பணி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆசிரியர்களை அரசு கைவிடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, "நேற்று பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் முதல் அனைத்து செயலாளர்களுடன் இதுபற்றி கலந்து ஆலோசித்தோம். இந்தத் தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன் எங்களுடைய சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுப்போம். ஆசிரியர்கள் அனைவருக்குமே அரணாக தமிழக அரசு இருக்கும். அதற்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எங்களுடைய ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அவர்களை அரவணைப்பதற்காக என்னென்ன பணிகளை செய்ய முடியுமோ அதைச் செய்ய காத்திருக்கிறோம்.
ஆசிரியர் சங்கங்களும் இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எனினும் அரசு சார்பில் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், யாரும் கவலைப்பட வேண்டாம். ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது" என்று கூறினார்.