ஆளுநரின் 13 குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதில்!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

ஆளுநர் தன்னுடைய உரையை வாசிக்காமல் வெளியேறியது ஏன் என 13 குற்றச்சாட்டுகளோடு ஓர் அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கிறது; நான் அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

”கடந்த நிதியாண்டில், 11.19 விழுக்காடு அளவுக்கு நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதைச் சொல்வது, நாங்கள் அல்ல.  ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை. ஆளுநர் கேள்வி கேட்க வேண்டுமென்றால், அவரை இங்கே அனுப்பி வைத்த ஒன்றிய அரசைத்தான் கேட்க வேண்டும்.  இன்னும் அவருக்கு நான் சில புள்ளிவிவரங்களைச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 17 இலட்சத்து 23 ஆயிரத்து  698 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் 3 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய். இது தேசிய சராசரியை விட 1.74 மடங்கு அதிகம்.   அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 98.3 விழுக்காடு அறிவியல் ஆய்வக வசதிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனால், அகில இந்திய அளவில் 50 விழுக்காடு பள்ளிகளில் தான் இந்த வசதி இருக்கிறது. 

உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒன்றிய அரசின் தரவரிசையில், தலைசிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் 33 கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கிறது.

மாநில அரசுகளால் நடத்தப்படும் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில், தமிழ்நாடு 788 புள்ளிகளோடு, இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

தமிழ்நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையாகத் தாக்கல் செய்திருக்கிறது. சமூக முன்னேற்றக் குறியீடு என்று இதற்குப் பெயர். பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது, தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலம் என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்கள் தொகை 11.2 விழுக்காடு.  ஆனால், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் 1.43 விழுக்காடு மக்கள்தான் இருக்கிறார்கள். அதையும் இல்லாமல் ஆக்குவதற்கு, தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.   

நம்முடைய அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்,
ஐ.நா. அமைப்பின் விருதைப் பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான். 

புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதில் Best Performer State. Startup தரவரிசைப் பட்டியலில், 2018-ல் கடைசியில் இருந்த தமிழ்நாடு 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறது.

ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாடு
80.89 புள்ளிகளுடன் முதலிடம். மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் 41.23 விழுக்காடு பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலம்.

தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஆகிய பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம். ஒட்டுமொத்த நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 38 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த, 20 ராம்சார் தளங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடம். மக்காச்சோள உற்பத்தித் திறனில் இரண்டாம் இடம்.  

சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரைக்கும், கடந்தகால அதிமுக ஆட்சியோடு ஒப்பிடுகையில், கொலைகள் - ஆதாயக் கொலைகள் - வழிப்பறித்  திருட்டு - பாலியல் வன்கொடுமைகள் என்று எல்லாமே பெருமளவில் குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதியாக்குகின்றன.

அதிக அளவு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்த மாநிலமாக இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடம்.

69 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.  

நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது 73-ஆக இருந்த
பேறுகால இறப்பு விகிதத்தை 40-ஆகவும், குழந்தை இறப்பு விகிதத்தை 10.4-லிருந்து 6.9-ஆகக் குறைச்சிருக்கோம்.

மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் தமிழ்நாடு விருது பெற்றிருக்கிறது. 

சிறந்த நீர் மேலாண்மைக்காக தேசிய அளவில் மூன்றாம் இடம்.

காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

காகிதம் இல்லா சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதற்காக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் விருது வழங்கி இருக்கிறது.

உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக தமிழ்நாட்டுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்காக
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே விருது வழங்கியிருக்கிறார்.

இப்படி ஒன்றிய அரசிடமிருந்து மட்டும் தமிழ்நாடு
65-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் ஆளுநர் விமர்சிக்கிறார் என்றால் அவருடைய பார்வைதான், பழுதுபட்ட பார்வையாக இருக்கின்றது. 

நமது அரசு செய்து கொண்டிருக்கிற திட்டங்களைப் பார்த்து, கேட்டு, அவற்றைத் தங்களுடைய மாநிலங்களிலேயும் செயல்படுத்த பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகாரிகள் வந்து தெரிந்து கொண்டு போகிறார்கள்.   ஏன், நம்முடைய திட்டங்களை ஒன்றிய அரசே "அடாப்ட்" பண்ணி நாடு முழுக்க செயல்படுத்துகிறார்கள். நம்மை விமர்சிக்கின்ற ஆளுநருக்கு, இவையெல்லாம் மட்டும் தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.   இங்கே மதச்சண்டை இல்லை. சாதிச்சண்டை இல்லை. கும்பல் வன்முறை இல்லை. தொடர் வன்முறை இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com