ஆளுநரின் அடாவடி தொடர்கிறது... வரவேற்பு நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் வரவேற்பு விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே ஆளுநர்களின் அடாவடிப் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் நடத்தும் குடியரசு தின வரவேற்பு நிகழ்வை புறக்கணித்தே வருகிறது என்றும் அதைப்போல இப்போதும் புறக்கணிக்க முடிவுசெய்திருப்பதாகவும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். 

இன்றைய அறிக்கையில் இதைப் பற்றி விவரித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது: 

”ஆளுநர் நடத்தும் குடியரசு தின வரவேற்பு நிகழ்வை புறக்கணிப்பதற்கான காரணங்கள் எதுவும் மாறாமல் இருக்கும் நிலையில் ஆளுநரின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது. ராஜ் பவனை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் ஆலோசனையின் பேரில்தான் ‘மக்கள் மாளிகை’ என்று பெயர் மாற்றம் செய்ததாக பிரதமர் மோடியே அறிவித்திருந்தார். ஆனால், ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே அமைந்திருக்கின்றது.

இதேபோன்று, ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ நிதியை இன்றுவரை நிறுத்தியே வைத்திருக்கிறது மற்றும் பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளுக்கு எதிராகவே நின்றிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் எடுத்தது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய பொறுப்பை மறந்து மார்க்சிசம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களின் மீது அவரது அறியாமையிலிருந்து வெளிப்பட்டிருக்கும் வன்மத்தை அவ்வப்போது கொட்டிக் கொண்டே இருக்கிறார். தமிழ்நாடு போராடி பெற்ற பல உரிமைகளையும், கேள்விக்குள்ளாக்கும் வகையிலேயே அவருடைய செயல்பாடும், பேச்சுக்களும் அமைந்திருக்கின்றன. இதன் உச்சபட்சமாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அறிக்கையை கூட தனது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி வாசிக்க முனைந்திருக்கிறார். இவற்றிலிருந்து அவர் கொஞ்சமும் மாறவில்லை; தன்னை மாற்றிக் கொள்ளவும் முயற்சிக்கவில்லை என்றே தெரிகிறது.

எனவே, இந்த ஆண்டும் ஆளுநர் குடியரசு தின வரவேற்பு விழாவிற்கு அழைத்துள்ளபோதும், அதை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது.” என்றும் பெ.சண்முகம் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com