ஆளுநர் இரவி தொடர்ந்து இடையூறு... அமைச்சர் கோவி. செழியன் சீற்றம்!

Minister Kovi Chezhiyan
அமைச்சர் கோவி. செழியன்
Published on

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைச் செயல்படவிடாமல் ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ந்து இடையூறு செய்துவருகிறார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் இன்று மாலையில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து...:

”தற்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அரசாணை (டி) எண் 270 உயர் கல்வி (எச்1) துறை நாள் 09.12.2024  மூலம் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு  மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு (Search Committee) அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக, அரசாணை (டி) எண் 277 உயர் கல்வி (ஐ1) துறை நாள்  13.12.2024  மூலம்  சார்ந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவினை   (Search Committee) அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. 

மேலும்,  திருச்சி, பாரதிதாசன் மற்றும் சேலம், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம்  முறையே  வரும் பிப்ரவரி 2025 மற்றும்  மே 2025ல் முடிவடைய உள்ளதால், இப்பல்கலைக்கழகங்களுக்கும்  புதிய துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக, சார்ந்த பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளின்படியும்,  உரிய சட்ட வல்லுநரின் ஆலோசனையை பெற்றும்  முறையே  அரசாணை (டி) எண் 271 உயர் கல்வி (எச்2) துறை நாள் 09.12.2024 மற்றும் அரசாணை (டி) எண் 276 உயர் கல்வி (கே1) துறை நாள் 13.12.2024ல் மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து ஆணைகள்   வெளியிடப்பட்டுள்ளன.   இதில் எவ்வித விதி மீறல்களும் இல்லை. 

தற்போது  மாண்புமிகு ஆளுநர்-வேந்தரின் அலுவலகத்தால்  18.12.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அரசாணை (டி) எண் 270 உயர் கல்வி (எச்1) துறை நாள் 09.12.2024  மூலம் புதிய துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு (Search Committee) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகள் மற்றும்  உச்சநீதிமன்ற தீர்ப்பினையும் மீறுவதாக உள்ளது என தெரிவித்து,  மேற்படி அரசாணையை திரும்ப பெறவும், தேடுதல் குழுவில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரை சேர்க்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் இதர கல்வி பணியாளர்களை நியமனம் செய்வதற்கு குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரத்தினை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நெறிமுறைகளை பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு நெறிமுறைகள், 2018 (UGC Regulations 2018) மூலம் வெளியிட்டது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் வெளியிடப்படும்  நெறிமுறைகளானது பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் மாநில அரசிற்கு பரிந்துரைப்பது வழிகாட்டுதல்களே (Only recommendations) தவிர, அவற்றை ஏற்பது என்பது மாநில அரசின் முடிவிற்கு உட்பட்டதாகும்.  மேற்காணும் நெறிமுறைகளை ஏற்பதற்காக, அந்த நெறிமுறைகளில் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவினை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறை 7.3 (ii) –இல் சார்ந்த பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளின்படியே தேர்வுக்குழு அமைக்கப்படும் என அரசாணை (நிலை) எண், 5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021 மூலம் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட நிலையில், மேற்குறிப்பிட்ட நான்கு பல்கலைக்கழகங்களுக்கு (அண்ணாமலை, அண்ணா, பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்கள்) அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் சார்ந்த பல்கலைக்கழக சட்டங்களின் படியும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண், 5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021ன் அடிப்படையிலும் தான் உள்ளது, இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை. எனவே, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச் சேர்த்து, மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம்.

பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டு கூறான கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து அந்தந்த மாநில தேவைகளுக்கு தகுந்தார்போல் உயர்கல்வி அமைப்பினை அமைத்துக் கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கென்று உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே செயல்படுகிறது. பல்கலைக்கழகம் பொதுவான சில பரிந்துரைகளை அவ்வப்போது வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தனது பல்கலைக்கழகத்திற்கு தான் இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகம் அல்லது அரசிற்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டியது இருந்தால் அதை நேரடியாக தெரிவிக்கும்.

வேந்தர் என்ற பதவி வழி பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆளுநர் அவர்கள் சட்டத்தை தவறாக தன் கையில் எடுத்துச் செயல்முறைகள் வெளியிடும் போக்கை அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதிதான் துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம். பல்கலைக்கழகங்கள் பல மாதங்களாக துணை வேந்தர் இல்லாமல் செயல்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆளுநர் நடந்து கொள்ளவது மாணவர்கள் நலனுக்கு எதிரானது ஆகும்.

மாணவர்கள் நலன் கருதி மாநில ஆளுநர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு ஒப்புதல் அளித்திடுவதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றம் மூலம் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஆளுநரின் கடமை.

ஆனால் அதனை செய்யாமல் அரசால் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் காக்கும் பலவற்றை நிராகரித்து வருகிறார். இதிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் ஒரு பிரதிநிதியாக செயல்பட்டு அரசு பல்கலைக்கழக சட்டத்தினை புறம்தள்ளி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிற்கு ஏற்றார்போல் சாதமாக செயல்பட்டு வருகிறார். இனியாவது மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தனது செயல்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று அமைச்சர் செழியன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com