ஆவடியில் 4ஆவது ரயில்முனையம் வருமா?- தென்சென்னை மக்கள் எதிர்பார்ப்பு!

ஆவடியில் 4ஆவது ரயில்முனையம் வருமா?- தென்சென்னை மக்கள் எதிர்பார்ப்பு!

சென்னையின் நெரிசலைக் குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிய வெளியூர் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆவடியில் நான்காவது ரயில்முனையம் அமைக்கவேண்டும் என்று குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு இதுதொடர்பாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த மனு விவரம்:

“ ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் முதலிய நகரங்கள் உள்ளடங்கிய தெலுங்கானா, ஆந்திரா, கேரளம், கர்நாடகம், தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து எக்ஸ்பிரஸ் மற்றம் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகின்றன. தாம்பரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகள், ஆவடியிலிருந்து தாம்பரம் வரை இடையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மேற்கண்ட ரயில்களை பிடிக்க சென்ட்ரல் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக சுமார் 2 1/2 முதல் 3 மணி நேரம் ஆகிறது. இதனால் கால விரையமும், கூடுதல் பணச் செலவும் ஏற்படுகிறது.

தற்பொழுது, ஆவடியிலிருந்து தாம்பரத்திற்கும் (202), ஆவடியிலிருந்து கிளாம்பாக்கத்திற்கும் (206), ஏற்கனவே ஆவடியிலிருந்து பூந்தமல்லிக்கும், ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும் நேரடியாக மாநகர பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

எனவே, சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி வழியாக வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களும், வெளியூர்களிலிருந்து ஆவடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டால் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், வேளச்சேரி, ஓ.எம்.ஆர் சாலை, இ.சி.ஆர் சாலை, வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம்,  கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெரிசலும் குறையும்.

மேலும், வெளியூரிலிருந்து வரும் பயணிகள் ஆவடியில் இறங்கி மேற்கண்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல பேருந்து வசதியும், மின்சார ரயில் வசதியும் உள்ளது. எனவே, தாங்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே பெரம்பூர் ரயில் நிலையத்தில் 90 சதவிகிதம் ரயில்கள் நின்று சென்னை செல்கின்றது. அதேபோல், ஆவடி ரயில் நிலையத்திலும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நான்காவது முனையமாக ஆவடியை தரம் உயர்த்தி, ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வரதராஜபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர்  டி.சந்தான கிருஷ்ணன், பொதுச்செயலாளர் வெ.ராஜசேகரன் ஆகியோர் கூறியுள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com