தென் மாவட்டங்களில் இன்ஸ்டாகிராம் முதலிய சமூக ஊடகங்களில் அரிவாள், கத்திகளுடன் கொடூரமான தோற்றம், பயங்கர இசையுடன் காணொலியைப் பதிவிடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்கோடி மாவட்டங்களில் இதன் அளவு மட்டுமீறிச் செல்லும் நிலையில், காவல்துறையினர் இதற்கெதிராகவே தனியான எச்சரிக்கைகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம், காணொலியைப் பதிவிட்டார், கயத்தாறைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (எ) காளி (21).
தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலையத்தினர் இவரைக் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவருடைய காணொலியையும் இப்படிப் பதிவிட வேண்டாம் எனப் போலீசால் கூறப்பட்ட விழிப்புணர்வு வாசகத்தை அந்த இளைஞனையே பேசவைத்தும் புதிய காணொலியைத் தூத்துக்குடி காவல்துறை வெளியிட்டுள்ளது.