இரண்டாவது யானைப் பாகன்கள் கிராமம்!

இரண்டாவது யானைப் பாகன்கள் கிராமம்!
Published on

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிக்கமுத்தி யானைகள் முகாம் உள்ளது. இங்கு பாகன்கள், யானை பராமரிப்பாளர்களுக்காக 47 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது, யானைப் பாகன்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது கிராமம் ஆகும். 

முதலமைச்சர் ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் முன்னிலையில் சென்னை, தலைமைச்செயலகத்தில் இருந்தபடி இன்று திறந்துவைத்தார்.

முன்னதாக, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானைபாகன் கிராமம் கடந்த மே 13ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில், யானைகளைப் பராமரிக்கும் காவடி பணியிடங்களுக்கு 6 பேருக்கு நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

“ இந்தியாவின் பழமையான யானை முகாமில் ஒன்றான கோழிக்கமுத்தி யானைகள் முகாம், யானை மேலாண்மையில் பல தலைமுறைகளாக பாரம்பரிய அறிவைப் பெற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களின் இருப்பிடமாகும். இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன.முகாம்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக யானைகளைப் பார்க்கும் காட்சியகம் மற்றும் பார்வையாளர் நடைபாதை போன்ற  நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு முன்னோடி முயற்சியாக, மாநில திட்டக்குழு நிதியிலிருந்து இம்முகாமில் 3.50 கோடி ரூபாய் செலவில்  பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் மைக்ரோ-கிரிட் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 124 kWp சூரிய சக்தி ஆலை, 516 kWh பேட்டரி வங்கி மற்றும் 100 kW இன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும்.

இது யானை முகாம் மற்றும் 47 யானைப் பாதுகாவலர் வீடுகளுக்கு தடையற்ற பசுமை மின்சார விநியோகத்தை உறுதி செய்கிறது. மேகமூட்டமான அல்லது மழைக்காலங்களிலும் இந்த அமைப்பு இரண்டு நாள்கள் மின்னாற்றலை வழங்குகிறது.

இது  அக்கிராமத்தை பசுமை மின்சாரம், நிலையான வாழ்க்கை மற்றும் இயற்கையுடன் இணக்கமான ஒரு வாழ்க்கை மாதிரியாக மாற்றுகிறது. இது நாட்டில் புலிகள் காப்பக நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com