
திருச்சியில் இரயில்வே கோட்ட அலுவலகத்தில் இந்தியில் மட்டும் பெயர் சூட்டுவதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். ” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ” புதிதாக கட்டப்பட்டுள்ள, திருச்சி மண்டல தெற்கு ரயில்வே அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் சூட்டியிருப்பது, புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் மற்றொரு முயற்சியாகும். தமிழர்களின் மொழிப் பற்றினையும், உணர்வுகளையும் புறக்கணித்து, இந்தியில் பெயரிடுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக இத்தகைய இந்தித் திணிப்பைத் தவிர்த்து, தமிழில் பெயரிட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், ” புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல இரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு இரயில்வே. “கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பெயர். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை“ இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு இரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.