இராபர்ட் கிளைவ் கல்யாணப் பதிவுகளை ஆர்வத்துடன் பார்த்த அமைச்சர்!

சென்னை ஆவணக் காப்பகத்தில் அமைச்சர் கோவி செழியன்
சென்னை ஆவணக் காப்பகத்தில் அமைச்சர் கோவி செழியன்
Published on

தமிழ்நாட்டை 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிசெய்த பிரிட்டன் அதிகாரி இராபர்ட் கிளைவின் திருமணம் 1753-ஆம் ஆண்டில் சென்னை, ஜார்ஜ் கோட்டை தேவாலயத்தில் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் பதிவேடுகளை உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் இன்று பார்வையிட்டார்.

உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், அவர் இன்று சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகம், வரலாற்று ஆராய்ச்சித் துறை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

அப்போது அவர் ஊடகத்தினரிடம் பேசியபோது, “ 2007-ஆம் ஆண்டு நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வரலாற்று ஆவணங்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரலாற்று ஆவணங்களை பராமரிக்க ரூ.5கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பின் வந்தவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. தற்போதுதான் முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதன்படி தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான கட்டட புனரமைப்புப் பணி மற்றும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆவணங்கள் செப்பனிடுதல் பணி மற்றும் ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்யும் பணி உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டோம். இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இந்த ஆவணக் காப்பகத்தில் 1670-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

மேலும், “ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதித்துறை ஆவணம், மகாகவி பாரதியாரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட காவலர்கள் பற்றிய விவரம், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட பின் நடந்த விசாரணையும் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம், 1753-ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் அவர்களுக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்ற திருமணத்தின் பதிவேடுகள், 1966-ஆம் ஆண்டு திருவிடைமருதூர் தொகுதி வாக்காளர் பட்டியல் உட்பட்ட பல்வேறு ஆவணங்களையும் பார்வையிட்டோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

”1973-ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு ஆராய்ச்சி மன்றம் தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப மீளுருவாக்கி தற்போது செயல்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 15 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும்.” என்றும் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com