இலங்கை- ஐ.நா., முதல்வர் கவலையை மோடி போக்கவேண்டும் : நெடுமாறன்

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்
Published on

ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐ.நா., முதலமைச்சர் ஆகியோரின் கவலையைப் போக்குவதற்கு மோடி முன்வரவேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக தென்செய்தி இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை விவரம்: 

” “இலங்கையில் புதிய அரசமைப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் நிலையில், அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், அவர்களது உரிமைகளைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தலைமையமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, “இலங்கைத் தமிழர்கள் 77ஆண்டுகளுக்கு மேலாகத் திட்டமிட்ட இனப் பாகுபாடு, வன்முறை மற்றும் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகளைச் சகித்து வந்துள்ளனர். இதையொரு சமுதாயத்திற்கு எதிரான இனப்படுகொலை என வரையறுக்கும் நிலை உருவாகியுள்ளது. சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் அரசமைப்புகள் 1947, 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகள் அனைத்தும் ஒற்றை ஆட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றி இருந்தன. இது திட்டமிடப்பட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது”.

முதல்வரின் இக்கடிதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனக் கவலையை வெளிப்படுத்துவதாகும் என்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட இந்திய அரசு முன்வரவேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

1948ஆம் ஆண்டு இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றவுடன் முதலாவதாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படும் மலையகத் தமிழர்களில் 10 இலட்சம் பேரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் சிங்களர்களின் 63 தொகுதிகள் 77ஆக உயர்த்தப்பட்டன. தமிழர்களின் தொகுதிகள் 20இலிருந்து 11ஆகக் குறைக்கப்பட்டன. 1956ஆம் ஆண்டு இலங்கையின் ஆட்சி மொழியாகச் சிங்களம் மட்டுமே என்னும் சட்டம் உருவாக்கப்பட்டது. சிங்கள அரசுப் பதவிகளில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டனர். சிங்கள இராணுவத்திலும் தமிழர்களின் சேர்ப்பு மறுக்கப்பட்டது. அஞ்சல், இரயில்வே, சுங்கம் மற்றும் மருத்துவமனைகளிலும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது. பொறியியல், மருத்துவப் படிப்புகளிலும் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக படிப்புகளில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தரப்படுத்தப்படுதல் என்ற பெயரால் சிங்கள மாணவர்களின் மதிப்பெண்கள் கூட்டப்பட்டன. இதற்கெதிராக தமிழ் மாணவர்கள் போராடியபோது, மிருகத்தனமாக அவர்கள் ஒடுக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படி பல்வேறு வகையிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டனர். இதற்கெதிராக தந்தை செல்வ நாயகம் தலைமையில் ஏறத்தாழ 30 ஆண்டுக் காலம் தமிழர்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், சிங்கள இராணுவம் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது, வேறு வழியே இல்லாமல் 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் தமிழரசுக் கட்சிக் கூடி சுதந்திரத் தமிழீழம் கோரிக்கையை முன்வைத்தது.

1979ஆம் ஆண்டு தமிழர்களின் அறப்போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கொடிய சட்டத்தைச் சிங்கள ஆட்சியினர் கொண்டு வந்தனர். அவசரக்கால நிலையை அறிவித்து இராணுவத்தினரால் கொல்லப்படும் தமிழர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமலும், மருத்துவ சோதனை செய்யாமலும் இராணுவமே அவர்களை எரிக்கவும், புதைக்கவும் அதிகாரம் பெற்றது.

தென்கிழக்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமும், 95000 புத்தகங்களைக் கொண்ட யாழ்ப்பாண நூலகம் சிங்கள இராணுவத்தினரால் திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. கலாச்சார ரீதியாகத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இதுவாகும்.

1956, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளும், அவர்களின் சொத்துக்களைச் சூறையாடுதலும் நிகழ்த்தப்பட்டன. 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தின்போது 3000த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சிறையிலிருந்த ஜகன், குட்டி மணி போன்ற தலைவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள கைதிகளால் பதறப் பதறப் படுகொலை செய்யப்பட்டனர். இக்கலவரத்திற்குப் பின்னர் சொந்த மண்ணில் வாழ முடியாமல் சுமார் 15இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பிற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள். இன்றளவும் அந்நாடுகளிலேயே தங்கள் தாயகத்தை எண்ணி ஏக்கமுடன் வாழ்கிறார்கள்.

1983ஆம் ஆண்டு இந்தியச் சுதந்திர நாளன்று (ஆகசுடு 15) இந்திய தலைமையமைச்சர் இந்திராகாந்தி தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்துப் பேசும்போது, “இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே ஆகும். இதை இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இராது” என எச்சரித்தார். இந்தியாவின் தலைமையமைச்சரினால் இனப்படுகொலை என்ற வார்த்தை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் போது 3000த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல கோடி ரூபாய் பெறுமான தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இலங்கையின் குடியரசுத் தலைவராக இருந்த விஜயதுங்கா, “இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு மரத்தின் ஒட்டுண்ணியைப் போன்றவர்கள்” எனக் கூறினார். தலைமையமைச்சராக இருந்த செயவர்த்தனா, “ஈழத் தமிழர்களின் கருத்துகள் குறித்து நான் கவலைப்படவில்லை. இப்போது அவர்களைப் பற்றியோ, அவர்களின் உயிர்களைப் பற்றியோ வடக்கிலிருந்து எங்களுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பீர்களானால் சிங்கள மக்கள் பெரிதும் கொதித்தெழுவார்கள். தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என ஈவுஇரக்கமற்ற முறையில் கூறினார்.

இந்திய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் இலங்கை இனப்பிரச்சனைக் குறித்து சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, செயவர்த்தனா மனம் கொதித்துப்போய் பின்வருமாறு கூறினார் “இந்திய அரசு எங்கள் மீது படையெடுக்க விரும்புமானால், 24மணி நேரத்தில் இலங்கையைக் கைப்பற்றி என்னையும் கைது செய்ய முடியும். ஆனால், அதற்குள்ளாகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்கள மக்களால் அடியோடு தீர்த்துக்கட்டப்படுவார்கள்” என எச்சரித்தார்.

இந்திராகாந்தி காலத்தில் அவரின் சிறப்புத் தூதரான ஜி. பார்த்தசாரதியின் முன்னிலையில் சிங்கள அரசு – தமிழ்த் தலைவர்கள் ஆகியோர் இடையே செய்யப்பட்ட உடன்பாட்டினையும், இராசீவ் – செயவர்த்தனா ஆகியோர் செய்துகொண்ட உடன்பாட்டினையும் முழுமையாக நிறைவேற்றச் சிங்கள அரசு முன்வராததோடு, தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்தது. இந்தியாவைப் பற்றியோ, உலக நாடுகள் குறித்தோ சிங்கள அரசு சிறிதளவுகூட கவலைப்படவில்லை.

இனப்படுகொலை என்னும் பெரும் குற்றத்தைத் தடுப்பது மற்றும் அவர்களுக்குத் தண்டனை விதிப்பது ஆகியவை குறித்து ஆராய்வதற்காக 1948ஆம் ஆண்டு ஐ.நா. பேரவை கூட்டிய மாநாட்டில் 140 நாடுகள் பங்கேற்றன. “இனப்படுகொலை என்பது ஒரு நாட்டின் அரசால் திட்டமிட்டுக் கடைப்பிடிக்கப்படுவதாகும். இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஒரு குழுவினரை அடியோடு ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே இனப்படுகொலையாகும்” என இம்மாநாடு கூறியது.

இனப்படுகொலையைத் தடுக்கவேண்டுமானால், இதில் ஈடுபடும் இராணுவம் அல்லது சிறப்புப் படை போன்றவைகள் தடைசெய்யப்படவேண்டும். இவற்றை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு விசாக்கள் வழங்கப்படக் கூடாது. இனப்படுகொலையில் ஈடுபடும் அரசுகள் அல்லது நாடுகளின் மக்கள் ஆகியோர் மீது ஆயுதத் தடையை ஐ.நா. விதிக்கவேண்டும். மேலும், ஐ.நா. விசாரணை ஆணையங்களை ஏற்படுத்தவேண்டும்” என இம்மாநாடு இனப்படுகொலையை குறித்து திட்டவட்டமான கோட்பாடுகளையும், இனப்படுகொலையில் ஈடுபடும் நாடுகளின் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விதிகளை வகுத்தது.

செர்மனியில் இட்லர் தலைமையில் நாஜிக் கட்சி ஆட்சியின் போது, 60இலட்சம் பேர் யூதர்கள் சித்ரவதை, படுகொலை, உயிரோடு எரித்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளானார்கள். இவர்களுக்கென்று தனியான தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள். செர்மனியில் மட்டுமல்ல, இட்லர் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் யூதர்களும், கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களும் வேட்டையாடப்பட்டனர். ஆனால், உலக சமுதாயம் தொடக்கத்தில் தயக்கம் காட்டினாலும், 2ஆம் உலகப்போருக்குப் பின்னர் இனப்படுகொலையாளர்களை விசாரித்துத் தண்டனை வழங்க நீதிமன்றங்களை அமைத்தது. அவ்வாறே நாஜித் தலைவர்கள் பலர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறே ருவாண்டா, போஸ்னியா, சூடான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளைச் சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்து தண்டித்தது. ஆனால், இனப்படுகொலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க உலக அமைப்புகள் எதுவும் முன்வரவில்லை.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான சிங்களர் நடத்திய இனவெறியாட்டத்தில் 3இலட்சம் தமிழர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கெதிராக உலக நாடுகளின் குரல் என்பது போதுமான அளவுக்கு எழவில்லை. இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. நடத்திய மாநாட்டில் 140 நாடுகள் கலந்துகொண்டன. அதில் இந்தியாவும் ஒன்று. ஆனால், தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் 140 நாடுகளில் ஒன்றுகூட முன்வரவில்லை. அவற்றுள் ஒன்றான இந்தியாகூட அவ்வாறு செய்யத் தயங்கிற்று.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் ஐ.நா. பேரவையால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நச்சு வாயு குண்டுகள், இரசாயன குண்டுகள் மற்றும் கொடூரமான ஆயுதங்களை சிங்கள இராணுவம் தமிழர்களுக்கெதிராக பயன்படுத்தியது. மேலும், மருத்துவமனைகள் சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட போரற்ற அமைதி மண்டலங்கள் ஆகியவற்றிலிருந்தவர்கள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2009ஆம் ஆண்டில் ஐ.நா. செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூன் அமெரிக்க வெளியுறவு செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன், சர்வதேச சட்ட பேராசிரியர் பிரான்சிஸ் பாயில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பர், தென்னாப்பிரிக்கத் தலைவரும், கிறிஸ்தவ ஆயருமான டெஸ்மாண்டு டூட்டு, ஐ.நா. செயலாளராக (1997-2006) இருந்த கோபி அன்னான், அயர்லாந்து குடியரசுத் தலைவரும், ஐ.நா. மனித உரிமை ஆணையராக இருந்த மேரி ராபின்சன், ஐ.நா. மனித உரிமை ஆணையராக இருந்த திருமதி. நவநீதம் பிள்ளை போன்றவர்கள் துணிந்து வெளிப்படையாகவே ஈழத்தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவெறிப் படுகொலைகளைக் கண்டித்தனர். ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மேற்கு நாடுகள் “சிங்கள அரசின் இனப்படுகொலையை கண்டித்து அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தினை சீனா மிகக் கடுமையாக எதிர்த்தது. அதன்விளைவாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அரசோ சிங்கள அரசுக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து சிங்கள அரசே ஒரு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. கொலையாளியையே நீதிபதியாக நியமிக்க இந்தியா முன்வந்து தமிழர்களுக்கெதிராக துரோகம் புரிந்தது.

நேற்று (17.01.26) ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அலுவலக அறிக்கையில் “இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கெதிரான பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவுமில்லை. போரின் போது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறுவதாகும். இது போர்க் குற்றங்கள் அல்லது மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நிகராகும். சிங்களப் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதற்கான நடவடிக்கையைச் சிங்கள அரசு மேற்கொண்டு அதற்கு முறையான மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும். அவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்” என அறிவித்துள்ளது. இது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்துகளையும், ஐ.நா. மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. பேரவையின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் விடுத்துள்ள அறிக்கைகளையும் மனதில் கொண்டு விரைவாகச் செயல்பட்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.” என்று நெடுமாறன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com