இலங்கையில் 6ஆம் தேதி பேசிவிட்டு கைதுசெய்வதா? - பாலகிருஷ்ணன் ஆதங்கம்!

கே. பாலகிருஷ்ணன்
கே. பாலகிருஷ்ணன்
Published on

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டுவருவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிப்பதாக அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், “2024 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 485 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 65 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.” என்பதைக் குறிப்பிட்டு,

”நவம்பர் 6 அன்று நடைபெற்ற இந்திய - இலங்கை கடலோர காவல் படை அதிகாரிகளின் கூட்டத்தில் மீனவர்களின் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள பின்புலத்தில், இந்த கைதுகள் நான்கு நாட்களுக்குள்ளாக நடைபெற்று இருப்பது பேச்சுக்கும் செயலுக்குமான முரணை வெளிப்படுத்துகிறது.” என்று விமர்சித்துள்ளார். 

மேலும், ”இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தாங்கவியலாத பெரும் தண்ட தொகைகளை இலங்கை நீதிமன்றங்கள் விதிப்பதும், மாதக் கணக்கில் அவர்கள் சிறையில் வாடுவதும், வாழ்வாதாரங்களை இழந்து அவர்களது குடும்பங்கள் தவிப்பதுமான மனிதாபிமானமற்ற சூழல் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.

எனவே, உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு கைதாகி உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்வதை உறுதி செய்யுமாறும், அவர்களின் படகுகளை மீட்டு திரும்ப ஒப்படைக்குமாறும், இத்தகைய அடாவடி செயல்களில் தொடர்ந்து இலங்கை கடற்படை ஈடுபடாமல் இருக்க அரசு மட்டங்களிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com