இலட்சக்கணக்கான வாழை மரங்கள் அழிவு- தலைமைச்செயலாளரிடம் முறையீடு!

புயலால் வாழை மரங்கள் சேதம்
புயலால் வாழை மரங்கள் சேதம்
Published on

வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயல் தொடர் மழையில் வேளாண் பயிர்கள் பாதிப்பிற்கு நிவாரணத் தொகையை உயர்த்தி உடனடியாக வழங்கக் கோரி, தலைமை செயலாளர், வேளாண்மை துறை செயலாளர் அவர்களையும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாநில துணைத்தலைவர் கே.உலகநாதன் Ex.MLA உள்ளிட்டோர் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

சந்திப்பில் அவர்கள் அளித்துள்ள மனு விவரம்:

வடகிழக்கு பருவமழையும் டித்வா புயலின் போது பெய்த தொடர் மழையிலும் பெருமளவு சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் கடந்த சில நாட்களாக நீரில் மூழ்கி, அழுகி வருகிறது. கடந்த செப்டம்பரிலும் வடகிழக்குபருவ மழை வெள்ளநீர் சூழ்ந்து குருவை அறுவடை நிலையில், நெல் கதிர்கள் நீரில் மூழ்கியும்...சம்பா, தாளடி இளம் பயிர்களும் பாதித்தன. இந்த சூழலில் நீரில் மூழ்கிய சம்பா,தாளடி பயிர்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. மழை தொடரும் நிலையில் மறு விதைப்பு மேற்கொள்ள வழியில்லை. டெல்டாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது.  

இந்த நிலையில் முதல்வர் , உடனடியாக அமைச்சர்கள் மற்றும் உயர்அலுவலர்களை  கூட்டி பேசி உடன் நிவாரண அறிவிப்பு செய்து பாதிப்பு கணக்கெடுக்க அறிவுறுத்தி உள்ளதற்கு நன்றி கூறுகிறோம். நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 8000 என்பது விவசாயிகளின் பாதிப்பிற்கு  ஏற்றதாக அமையாது. இந்த நிவாரணம் என்பது பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கு இடு பொருட்களுக்காக என பேரிடர் வரன்முறையின் வழிகாட்டுதலாகும். 

எனவே, ஒரு பருவத்தின் மகசூலை இழந்ததுடன். இதுவரை செய்த செலவு தொகையையும் இழந்துள்ள நிலையில்,காப்பீடு திட்டத்தின் மூலம் பேரிடர் பாதிப்பில் அழியும் நெல் இளம் பயிர்களுக்கு வழங்க வாய்ப்புள்ள தொகையையும் சேர்த்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரம் வழங்கிட வேண்டும்.     டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது இதே போல் தமிழக அரசு மூலம் முழு தொகையையும் கொடுத்துவிட்டு, பின் காப்பீடு இழப்பீட்டை அரசு எடுத்துக் கொண்டது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.       

மேலும் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் பல லட்சம் மரங்கள் முறிந்து விட்டன. நிலக்கடலை,வெற்றிலை, சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்களும் மழை தீவிரத்தில் பாதித்துள்ளன. இவைகளுக்கும் செலவை ஈடு கட்டி, வருமானம் பெற்றிடும் நிலையில் நிவாரணம் வழங்கிட வேண்டும். மனித உயிரிழப்பிற்கு 10 லட்சம் வழங்கிட வேண்டும். கால்நடைகள் இழப்பு.. குடியிருப்புகள் பாதிப்பிற்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.  வரும் 8 ஆம் தேதிக்குள் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு வரவேற்க கூடியது.ஆனால் கள நிலவரம் இதற்கு இசைவாக இல்லை. பயிர் பாதிப்பு கணக்கீடு செய்திட செயலி முறை தற்போதைய நிலையில் சாத்தியமில்லை. ஒரு ஏ.ஏ.ஓ... 5 முதல் 12 கிராம வருவாய் வட்டங்கள் பொறுப்பு.இந்த கணக்கெடுப்பிற்கு அத்தனை  வி.ஏ.ஓ.க்களும் களப்பணிக்கு வர வேண்டும். நீர் சூழ்ந்த நிலையில் இம்முறை சாத்தியம் இல்லை. ஒரு மாதத்திற்கு மேலாகும். உதவி என்பது துயர் அடைந்த நிலையில் வேண்டும்.

எனவே, வழக்கமான முறையில் பாதிப்பை பார்வையிட்டு, கணக்கீடு செய்து உடன் நிவாரணம் வழங்கிட வேண்டும்.” என்று விவசாயிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.                     

logo
Andhimazhai
www.andhimazhai.com